அப்டின்னா அவங்க இந்தியர்கள் இல்லையா? ஏன் பாகிஸ்தானுக்கு அனுப்புனீங்க.. இந்தியாவுக்கு சல்மான் பட் கேள்வி

Salman Butt
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. 1996க்குப்பின் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் அதுவும் முழுமையாக ஒரு ஐசிசி தொடர் நடைபெற உள்ளது. எனவே அதை வெற்றிகரமாக நடத்த பாகிஸ்தான் வாரியம் முழு வீச்சில் வேலை செய்து வருகிறது. ஆனால் அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று இந்தியா இப்போதே அடம் பிடிக்கத் துவங்கியுள்ளது.

ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது. அத்துடன் 2012க்குப்பின் இரு தரப்பு தொடர்களில் மோதுவதை முழுமையாக நிறுத்தியுள்ள இந்தியா ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் மட்டும் பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது. ஆனால் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது.

- Advertisement -

சல்மான் பட் கேள்வி:
இருப்பினும் எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று அத்தொடரில் விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கை மண்ணில் விளையாடி வெற்றி கண்டது. அதே போல இம்முறையும் தங்களுடைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துங்கள் என்று ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதனால் இம்முறையும் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்பது தெரிய வருகிறது. இந்நிலையில் சமீபத்திய வருடங்களில் இந்தியாவின் கபடி மற்றும் டென்னிஸ் அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடியதாக முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். எனவே அவர்கள் இந்தியர்கள் இல்லையா? என்று தெரிவிக்கும் அவர் கிரிக்கெட் அணியை மட்டும் பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுப்பது ஏன்? என்று பிசிசிஐ மற்றும் இந்திய அரசிடம் கேள்வியை முன்வைத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியை நடத்துவதற்கான உரிமையை பாகிஸ்தான் வைத்துள்ளது. எனவே அது பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும். மற்ற அணிகளைப் போலவே இந்தியாவும் அத்தொடரில் பாகிஸ்தானில் விளையாட வேண்டும். 2023 உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவுக்கு எங்கள் அணி சென்றது”

இதையும் படிங்க: அக்சர் பட்டேலுக்கு அடுத்து வாஷிங்டன் சுந்தர் தான் என்பதை உறுதி செய்து விட்டார் – இனிமே சேன்ஸ் கன்பார்ம்

“இரு நாடுகளின் உறவு பற்றி நிறைய பேச்சுக்கள் காணப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் இந்தியாவின் கபடி மற்றும் டென்னிஸ் அணிகள் இதே பாகிஸ்தானுக்கு வந்தன. எனவே ஒன்று மொத்தமாக பாகிஸ்தானுக்கு விளையாட வராதீர்கள் அல்லது ஒரே மாதிரியாக இருங்கள்” என்று கூறினார். மேலும் பாகிஸ்தானில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாகவும் சல்மான் பட் தெரிவித்தார். எனவே அவர்கள் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் விரும்புவதால் இந்தியா தங்கள் நாட்டுக்கு வந்து விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement