
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியானது நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 13.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கி விளையாடிய சுப்மன் கில் 9 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 20 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக பொறுப்பினை பெற்ற சுப்மன் கில் முதல் போட்டியிலேயே இந்திய அணியை பிரமாதமான வெற்றிக்கு அழைத்துச் சென்றது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் சுப்மன் கில் நேராக சென்று ஐக்கிய அரபு அமீரக பந்து வீச்சாளரான சிம்ரன்ஜீத் சிங்கை சிரித்தபடி கட்டித்தழுவிய ஒரு விடயம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்த ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக பேசியிருந்த ஐக்கிய அரபு அமீரக அணியை சேர்ந்த பந்துவீச்சாளர் சிம்ரன்ஜீத் சிங் கூறுகையில் :
நான் பஞ்சாப் அணிக்காக என்னுடைய இளம் வயதில் விளையாடிய போது 12 வயதான சுப்மன் கில்லுக்கு எதிராக வலைப்பயிற்சியில் நிறைய பந்துவீசி இருக்கிறேன். அவருக்கு இப்போது என்னை ஞாபகம் இருக்குமா? இருக்காதா? என்று தெரியவில்லை. இருந்தாலும் அவருக்கு எதிராக பந்துவீச ஆவலாக காத்திருக்கிறேன் என்று பேசியிருந்தார்.
அந்த வகையில் நேற்று சுப்மன் கில்லுக்கு எதிராக அவர் 2 பந்துகளை வீச சுப்மன் கில் அவருடைய பந்துவீச்சில் பவுண்டரி அடித்து போட்டியை முடித்து வைத்தார். இந்நிலையில் சிம்ரன்ஜீத் சிங்கை அடையாளம் கண்டுகொண்ட சுப்மன் கில்லும் போட்டி முடிந்த பின்னர் அவரிடம் சென்று நலம் விசாரித்தபடி அவரை கட்டி அணைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க : புவனேஷ்வர் குமாருக்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக குல்தீப் யாதவ் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
தனது இளமைக்காலத்தில் முதல்தர கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய சிம்ரன்ஜீத் சிங் பின்னர் அங்கிருந்து துபாய் நாட்டிற்கு இடம் பெயர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அணியின் வாய்ப்பைப் பெற்று அந்த அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.