கில் முதல் சதமடிக்க காரணமே யுவிதான் – வெளியான பின்னணி தகவல் (கோலிக்கு கொஞ்சம் அட்வைஸ் கொடுங்க)

Yuvraj Singh Shuman Gill
- Advertisement -

ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட இந்த தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா ஆகஸ்ட் 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வேயை முறையே 189, 161 ரன்களுக்கு சுருட்டி எளிதாக வென்று ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது.

அந்த நிலைமையில் நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் இந்தியா நிர்ணயித்தத 290 ரன்கள் இலக்கை துரத்திய ஜிம்பாப்வே கடைசி வரை போராடி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணிக்கு தனியொருவனாக போராடிய சிகந்தர் ராசா சதமடித்து 115 (95) ரன்கள் எடுத்த போதிலும் வெற்றியை பெறமுடியவில்லை. அந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 15 பவுண்டரி 1 சிக்சருடன் 130 (97) ரன்கள் குவித்ததுடன் சிகந்தர் ராசா கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக தாவிப்பிடித்த சுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

போராட்ட சதம்:
அத்துடன் 82*, 33, 130 என இந்த தொடர் முழுவதும் கலக்கிய அவர் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருதை வென்றிருந்த இவர் 2019இல் சீனியர் அணிக்காக அறிமுகமாகி ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டு காயத்தால் வெளியேறினார். அதன்பின் 2021இல் ஆஸ்திரேலியாவில் இந்தியா பதிவு செய்த வரலாற்று சிறப்புமிக்க காபா டெஸ்ட் வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்று நல்ல தொடக்கத்தை பெற்றபோதிலும் சதத்தை அடிக்க முடியாமல் தவித்தார்.

குறிப்பாக 3வது போட்டியில் 98* ரன்கள் விளாசிய அவரை முதல் சதத்தை தொட விடாமல் மழை தடுத்தது. அந்த நிலைமையில் இந்த தொடரின் 2வது போட்டியில் 33 ரன்களில் அவுட்டான பின் தனது தந்தை திட்டியது 3வது போட்டியில் சதமடிக்க உதவியதாக சுப்மன் கில் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதைவிட 2 வருடங்களாக இந்தியாவுக்காக முதல் சதத்தை அடிக்க முடியாமல் தவித்த தமக்கு ஜாம்பவான் யுவராஜ் சிங் கொடுத்த உத்வேகம் தான் சாதிக்க முக்கிய காரணமென்று அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

- Advertisement -

யுவியின் ஆதரவு:
இந்த ஜிம்பாப்வே தொடருக்கு முன்பாக யுவராஜ் சிங்கை சந்தித்த போது அவர் கொடுத்த ஆலோசனைகள் தான் முதல் சதமடிக்க முக்கிய காரணமென்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஜிம்பாப்வே புறப்படுவதற்கு முன்பாக அவரை (யுவராஜ்) நான் சந்தித்தேன். அப்போது “நீங்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறீர்கள், களத்திற்கு சென்று செட்டிலாகி கவனத்தை சிதற விடாமல் தொடர்ந்து பேட்டிங் செய்யுங்கள்” என்று அவர் என்னிடம் கூறினார். அதற்கு நான் “அப்படித்தான் செய்கிறேன், இருப்பினும் சதம் வரவில்லை” என்று பதிலளித்தேன். அதற்கு அவர் “கவலை வேண்டாம், இதை மட்டும் செய்யுங்கள் சதம் தாமாக வரும்” எனக்கூறி உத்வேகத்தை கொடுத்தார்” என்று கூறினார்.

அப்படி யுவராஜ் சிங் கொடுத்த உத்வேகத்தால் ஜிம்பாப்வே மண்ணில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மா மற்றும் அதிகபட்சம் ஒருநாள் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையையும் சுப்மன் கில் முறியடித்துள்ளார். அதனால் மகிழ்ச்சியடைந்துள்ள யுவராஜ் சிங் “ஒருவழியாக, மிகச் சிறப்பாக விளையாடினீர்கள் சுப்மன் கில், இந்த சதத்துக்கு நீங்கள் மிகவும் தகுதியானவர்கள். உங்களின் முதல் சதத்துக்கு வாழ்த்துக்கள், இது வெறும் ஆரம்பம் தான் இது போல் நிறைய சதங்கள் வரும்” என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

கோலிக்கு ஆலோசனை:
முன்னதாக மற்றொரு இந்திய வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையும் மிஞ்சி சாதனைகள் படைத்த போதிலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவித்து வந்தார். அந்த நிலைமையில் சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டிக்கு முன்பாக தொலைபேசியில் பேசிய யுவ்ராஜ் அவருக்கு 45 நிமிடங்கள் சதமடிப்பதற்கான ஆலோசனைகளைக் கொடுத்தார்.

இதையும் படிங்க : கவுண்டி கிரிக்கெட்டில் கேப்டனாக மிரட்டும் புஜாரா, டி20 உ.கோ சான்ஸ் கொடுக்குமாறு ரசிகர்கள் கலகலப்பு

அவரின் ஆலோசனைகளின்படி விளையாடிய ரிஷப் பண்ட் முதல் சதமடித்து 125* ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்து தன் மீதான விமர்சனங்களை தகர்த்தெறிந்தார். இப்படி இளம் வீரர்களுக்கு அடுத்தடுத்த ஆலோசனைகளை கொடுத்து சதமடிக்க உதவும் யுவராஜ் சிங்கை பார்க்கும் ரசிகர்கள் நீண்ட காலமாக விமர்சனத்தில் தவித்து வரும் விராட் கோலிக்கும் ஆலோசனை கொடுத்து அடம்பிடிக்கும் 71வது சதத்தை அடிக்க உதவுமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement