கவுண்டி கிரிக்கெட்டில் கேப்டனாக மிரட்டும் புஜாரா சாதனை, டி20 உ.கோ சான்ஸ் கொடுக்குமாறு ரசிகர்கள் கலகலப்பு

Pujara Virat Kohli babar Aazam
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர மூத்த வீரர் செடேஸ்வர் புஜாரா கடந்த 10 வருடங்களாக பொறுமையின் சிகரமாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சரித்திர பெறுவதற்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இருப்பினும் கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் கடந்த பிப்ரவரியில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின் நடந்த ரஞ்சி கோப்பையிலும் சுமாராக செயல்பட்ட தன்னை ஐபிஎல் தொடரில் எந்த அணிகளும் வாங்காததால் இந்திய அணிக்கு திரும்ப வேறு வழியின்றி இங்கிலாந்தின் பிரபல கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டார்.

சசக்ஸ் அணிக்காக விஸ்வரூபம் எடுத்து வெளுத்து வாங்கிய அவர் சதங்களையும் இரட்டை சதங்களை விளாசி ரன் மழை பொழிந்து பழைய ஃபார்முக்கு திரும்பி சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். அந்த போட்டிக்குப் பின் தொடர்ந்து இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள அவர் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். முன்னதாக டெஸ்ட் தொடரின் போது அந்த அணியின் கேப்டன் காயத்தால் வெளியேறியதால் தலைமைப் பொறுப்பேற்ற புஜாரா இந்த ஒருநாள் தொடரில் முழுநேர கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அந்நியன் புஜாரா:
பொதுவாகவே பூமியை போல பொறுமையான குணம் கொண்ட புஜாரா அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுக்கும் ஸ்டலை கொண்டவர். ஆனால் இந்த தொடரில் அப்படியே நேர்மாறாக ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வரும் அவர் 73 பந்துகளில் சதமடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த நிலைமையில் ஆகஸ்ட் 23ஆம் தேதியான நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற மிடில்சக்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சசக்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சரவெடியாக பேட்டிங் செய்து 400/4 ரன்கள் விளாசியது.

அந்த அணிக்கு அலி ஓர் 20, டாம் கிளார்க் 9 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற தொடக்க வீரர் டாம் அஸ்லோப் அதிரடியாக ரன்களை சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்த புஜாரா அவரைவிட அதிரடியாக பேட்டிங் செய்து விரைவாக ரன்களை சேர்த்தார். 18வது ஓவரில் சேர்ந்த இவர்கள் 45 ஓவர் வரை எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கி 3வது விக்கெட்டுக்கு 240 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை வலுப்படுத்தினர்.

- Advertisement -

மிரட்டிய புஜாரா:
இந்த ஜோடியில் டி20 இன்னிங்ஸ் போல 20 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் பறக்கவிட்ட புஜாரா 132 (90) ரன்களை விளாசி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். மறுபுறம் கடைசி வரை சிறப்பாக பேட்டிங் செய்த டாம் அஸ்லோப் 19 பவுண்டரி 5 சிக்சருடன் 189* (155) ரன்களை விளாசி சூப்பரான பினிஷிங் கொடுத்தார். அதை தொடர்ந்து 400 ரன்களை துரத்திய மிடில்சக்ஸ் ஆரம்பம் முதலே சசக்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 38.1 ஓவரில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் க்ரக்னல் 71 ரன்கள் எடுக்க எஞ்சிய வீரர்கள் 50 ரன்களை கூட எடுக்கவில்லை.

அதனால் 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சசக்ஸ் குரூப் ஏ பிரிவில் பங்கேற்ற 8 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்து 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் புஜாரா தலைமையில் அசத்திய அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அத்துடன் இந்த தொடரில் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் கலக்கும் புஜாராவை இந்திய ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் வியந்து பாராட்டுகிறார்கள்.

- Advertisement -

சூப்பர் சாதனை:
குறிப்பாக இந்த போட்டியில் 132 ரன்களை 146.66 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளாசிய அவருக்கு விரைவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்குமாறு கலகலப்புடன் பாராட்டுகிறார்கள். மேலும் இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 3 சதங்களையும் 2 அரை சதங்கள் உட்பட 614 ரன்களை இந்த தொடரில் பங்கேற்கும் இதர பேட்ஸ்மேன்களை விட 102.33 என்ற அபார சராசரியிலும் 116.28 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் வெளுத்து வாங்கி வருகிறார்.

இதன் வாயிலாக இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ள அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரியை கொண்டுள்ள பேட்ஸ்மேன்களின் பட்டியலில் (குறைந்தது 100 இன்னிங்ஸ்) விராட் கோலி, பாபர் அசாம் ஆகியோரை முந்தி ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவனுக்கு பின் 2வது இடத்தில் ஜொலிக்கிறார்.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : ஆவேஷ் கானுக்கு பதிலா இவர்தான் அந்த இடத்தில் விளையாடனும் – எல்.பாலாஜி வெளிப்படை

அந்த பட்டியல் இதோ:
1. மைக்கேல் பெவன் : 57.86
2. செடேஸ்வர் புஜாரா : 57.48
3. விராட் கோலி : 56.60
4. பாபர் அசாம் : 56.56

Advertisement