IPL 2023 : ஐபிஎல் முதல் இன்டர்நேஷனல் வரை கில்லியாக சொல்லி அடிக்கும் சுப்மன் கில் – வேறு யாரும் படைக்காத தனித்துவ சாதனை

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் இதுவரை 13 போட்டிகளில் 8 வெற்றிகளை பதிவு செய்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்ட அந்த அணிக்கு பேட்டிங் துறையில் அபாரமாக செயல்பட்ட இளம் வீரர் சுப்மன் கில் 483 ரன்கள் குவித்து முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய நிலையில் இந்த வருடம் 576* ரன்கள் விளாசி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் 2019இல் சீனியர் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்யப்பட்ட மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அவர் காயத்தால் வெளியேறினார். இருப்பினும் 2022 ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்டதால் மீண்டும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்தார்.

- Advertisement -

ஆல் ஏரியாவின் கில்லி:
அதை விட இந்த வருடம் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இளம் வயதில் இரட்டை சதமடித்த (208 ரன்கள்) வீரராக உலக சாதனை படைத்த அவர் அதைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் சதமடித்து 126* (99) ரன்கள் விளாசினார். அத்துடன் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மீண்டும் அகமதாபாத் மைதானத்தில் சதமடித்த அவர் (128 ரன்கள்) டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே காலண்டர் வருடத்தில் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரராக சாதனை படைத்தார்.

இந்நிலையில் அதே அகமதாபாத் மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக தன்னுடைய ஐபிஎல் சதத்தை விளாசி 101 (58) ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றிய அவர் உலகில் ஒரே காலண்டர் வருடத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் ஆகிய 4 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் வீரராக தனித்துவமான சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

கடந்த 15 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகராக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் அனைத்து டாப் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடுகின்றனர். இருப்பினும் இதற்கு முன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற இந்திய நட்சத்திரங்கள் உட்பட யாருமே ஒரே காலண்டர் வருடத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து ஐபிஎல் தொடரிலும் சதத்தை அடித்ததில்லை.

ஆனால் அதை முதல் வீரராக அடித்து அசத்தியுள்ள சுப்மன் கில் சர்வதேசம் முதல் ஐபிஎல் வரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆல் ஏரியாவிலும் கில்லியாக சதங்களை சொல்லி அடித்து வருகிறார். அப்படி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவதாலேயே ஏற்கனவே அவரை சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:IPL 2023 : வாழ்க்கை முடிஞ்சுன்னு நினச்சேன், ஒரு மாசம் லேட்டா போயிருந்தா ஒரு கைய கட் பண்ணிருப்பாங்க – மோசின் கான் பேட்டி

இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளிலும் விளையாடி குஜராத் கோப்பையை தக்க வைப்பதற்கு பங்காற்றி வரும் அவர் அடுத்ததாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவுக்கு கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement