
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வரும் இந்தியா ஆகஸ்ட் 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அதனால் ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய 3வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த இந்தியாவுக்கு 63 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் கேஎல் ராகுல் 30 (46) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்த சில ஓவர்களில் ஷிகர் தவான் 5 பவுண்டரியுடன் 40 (68) ரன்களில் அவுட்டானார்.
அந்த நிலைமையில் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் – இஷான் கிசான் ஆகியோர் நங்கூரமாக ஜோடி சேர்ந்து ஜிம்பாப்வே பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 3வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினர். அந்த ஜோடியில் இஷான் கிசான் 50 (61) ரன்களில் ரன் அவுட்டாக அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 1 (3) சஞ்சு சாம்சன் 15 (13), அக்சர் படேல் 1 (4) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினர்.
கலக்கிய கில்:
இருப்பினும் மறுபுறம் அசத்திய சுப்மன் கில் 15 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 130 (97) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 289/8 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக ப்ராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் துரத்திய ஜிம்பாப்வேவுக்கு கைடானோ 13, இன்னசென்ட் கயா 6, முன்யோங்கா 15, கேப்டன் சகப்வா 16, ரியன் புர்ள் என முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.
இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் சீன் வில்லியம்ஸ் 45 (46) ரன்களில் ஆட்டமிழக்க சமீபத்திய வங்கதேச தொடரில் வெற்றி பெறுவதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய சிகந்தர் ராசா மிடில் ஆர்டரில் களமிறங்கி இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக பேட்டிங் செய்தார். ப்ராட் எவன்ஸ் உடன் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடிய அவரை கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய இந்தியா 9 பவுண்டரி 3 சிக்சருடன் 115 (95) ரன்களில் அவுட் செய்து 49.3 ஓவரில் 276 ரன்களில் ஆல் அவுட்டாகி வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 3 விக்கெட்களை எடுத்தார். இந்த த்ரில் வெற்றியால் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கிய பங்காற்றிய இவர் 2019இல் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதுடன் காயத்தால் வெளியேறினார்.
அப்படியே 2 வருடங்கள் உருண்டோடிய நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் கோப்பையை வெல்ல பேட்டிங் துறையில் முக்கிய பங்காற்றியதால் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்று அசத்திய அவர் தொடர் நாயகன் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அந்த தொடரில் நல்ல தொடக்கத்தை பெற்ற போதிலும் சதத்தை தொடாமல் அவுட்டான அவர் 3வது போட்டியில் 98* ரன்களில் இருந்த போது மழை தடுத்தது.
அந்த நிலைமையில் இந்த ஜிம்பாப்வே தொடரிலும் 82*, 33 என முதல் 2 போட்டிகளில் நல்ல ரன்களை எடுத்த அவர் ஒரு வழியாக இந்த போட்டியில் சதமடித்து ஒருநாள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். 1. அதிலும் தனது 22 வயது 349 நாட்களிலேயே சதமடித்துள்ள அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து ஜிம்பாப்வே மண்ணில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 22 வருடம் 348 நாட்கள்*
2. ரோகித் சர்மா : 23 வருடம் 028 நாட்கள்
3. யுவராஜ் சிங் : 23 வருடம் 266 நாட்கள்
2. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே மண்ணிலும் அந்த அணிக்கு எதிராகவும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சச்சினின் ஆல்-டைம் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 130, ஹராரே, 2022*
2. சச்சின் டெண்டுல்கர் : 127*, புலவாயோ, 1998
3. அம்பத்தி ராயுடு : 124*, ஹராரே, 2015
3. இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 9 போட்டிகளுக்கு பின் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரராகவும் அசத்தியுள்ளார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 499*
2. ஷ்ரேயஸ் ஐயர் : 469
3. நவ்ஜோட் சித்து : 417
இதையும் படிங்க : IND vs ZIM : இறுதிவரை போராடி தோற்ற ஜிம்பாப்வே. பரப்பான கடைசி போட்டியில் நடந்தது என்ன? – முழுவிவரம் இதோ
4. மேலும் ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் அறிமுக ஒருநாள் சதத்தை அடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா (2010) மற்றும் கேஎல் ராகுல் (2016) ஆகியோருக்குப் பின் பெற்றார்.