IND vs ZIM : இறுதிவரை போராடி தோற்ற ஜிம்பாப்வே. பரப்பான கடைசி போட்டியில் நடந்தது என்ன? – முழுவிவரம் இதோ

IND vs ZIm Ishan Kishana
- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் அசத்திய இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளுடன் 2 – 0* என்ற கணக்கில் முன்கூட்டியே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலைமையில் ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று துவங்கிய சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு 63 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் கேஎல் ராகுல் 30 (46) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் ஷிகர் தவான் 5 பவுண்டரியுடன் 40 (68) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் அடுத்ததாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி நங்கூரமாக பேட்டிங் செய்து ஜிம்பாப்வே பவுலர்களை வெளுத்து வாங்கினர். 43 ஓவர்கள் வரை ஜோடி போட்டு சிறப்பாக செயல்பட்ட இவர்கள் 3வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய போது 6 பவுண்டரியுடன் 50 (61) ரன்கள் எடுத்த இஷான் கிஷன் தேவையின்றி ரன் அவுட்டாக அதே ஓவரிலேயே அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 1 (5) ரன்னில் போல்டானார்.

- Advertisement -

அசத்திய கில்:
அந்த நிலைமையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 சிக்சரை பறக்க விட்டாலும் 15 (13) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அக்சர் பட்டேல் 1 (4) ரன்னில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 15 பவுண்டரி 1 சிக்சருடன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து 130 (97) ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 289/8 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அதை தொடர்ந்து 290 என்ற இலக்கை துரத்திய ஜிம்பாப்வேவுக்கு தொடக்க வீரர் இன்னசன்ட் கயா 1 (6) ரன்னில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் கைடானோ காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். அதனால் வழக்கம்போல சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் நிதானமாக செயல்பட்டு 7 பவுண்டரியுடன் 45 (46) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் முன்யோங்கா 15 (31) ரன்களிலும் கேப்டன் சகப்வா 16 (27) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

போராடிய ஷிகந்தர்:
அடுத்த ஓவரிலேயே காயத்திலிருந்து வந்து பேட்டிங் செய்த தொடக்க வீரர் கைடானோ 13 (22) ரன்களில் அவுட்டானார். அதனால் மீண்டும் படு தோல்வி உறுதியென்று அந்நாட்டு ரசிகர்கள் நினைத்தபோது சமீபத்திய வங்கதேச தொடரை வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய நம்பிக்கை நட்சத்திரம் சிகந்தர் ராசா அடுத்ததாக களமிறங்கி ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் ரன்களை சேர்த்து வெற்றிக்கு போராடினார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய ரியான புர்ள் 8 (16), ஜோங்வே 14 (13) என முக்கிய வீரர்கள் அவருக்கு கை கொடுக்காமல் அவுட்டாகி சென்றாலும் மறுபுறம் அதிரடியை அதிகப்படுத்திய சிகந்தர் ராசா அனைத்து பவுலர்களையும் வெளுத்து வாங்கி சிம்ம சொப்பனமாக மாறினார். அதனால் வெற்றியை நெருங்கிய ஜிம்பாப்வேவுக்கு கடைசி 6 ஓவரில் 59 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரிகளை விளாசி அட்டகாசமான சதத்தை அடித்த ராசாவுக்கு உறுதுணையாக பிராட் எவன்ஸ் கைகொடுத்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அமர்களப்படுத்தினார்.

- Advertisement -

திரில்லர் திருப்பம்:
குறிப்பாக அவேஷ் கான் வீசிய 48வது ஓவரில் சிகந்தர் ராசா 6, 4, 1 என 11 ரன்கள் எடுக்க 5வது பந்தில் பவுண்டரி பறக்கவிட்ட எவன்ஸ் கடைசி பந்தில் 28 (36) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு வெறும் 17 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட போது ஷார்துல் தாகூர் வீசிய 49வது ஓவரின் 4வது பந்தில் சிகந்தர் ராசா 9 பவுண்டரி 3 சிக்சருடன் 115 (95) ரன்களில் கொடுத்த கேட்ச்சை சுப்மன் கில் கச்சிதமாக பிடித்ததால் அவுட்டானார்.

அத்தோடு அந்த அணியின் போராட்டமும் முடிந்தது போல் அடுத்து வந்த நயுச்சியை கடைசி ஓவரை வீசிய அவேஷ் கான் போல்ட்டாக்கினார். அதனால் 49.3 ஓவரில் 276 ரன்களை மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே இத்தொடரில் முதல் முறையாக போராடி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் கில் அடித்த சதத்தால் 300 ரன்களை எளிதாக தொடங்க வேண்டிய இந்தியாவை கடைசி நேரத்தில் அற்புதமாக பந்து வீசிய ஜிம்பாவே சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா போன்றவர்களை சொற்ப ரன்களில் அவுட் செய்து மடக்கி பிடித்தது.

அதேபோல் பேட்டிங்கில் தனி ஒருவனாக போராடிய சிகந்தர் ராசாவின் போராட்டத்தால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சீன் வில்லியம்ஸ் தவிர யாராவது ஒருவர் 30 ரன்களை எடுத்திருந்தால் கூட ஆறுதல் வெற்றியைப் பெற்றிருக்கும். ஆனால் பேட்டிங்கில் கடைசியில் சொதப்பிய இந்தியா பந்துவீச்சில் கடைசி நேரத்தில் கச்சிதமாக செயல்பட்டு சிக்கந்தர் ராசாவை அவுட் செய்து திரில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றியால் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்த தொடரில் வைட்வாஷ் பெற்ற இந்தியா மீண்டும் இளம் வீரர்களுடன் கோப்பையை வென்று தன்னை உலகத்தரம் வாய்ந்த அணி என நிரூபித்துள்ளது.

Advertisement