IPL 2023 : இந்தியாவின் வருங்காலமாக – விராட் கோலியை மிஞ்சி இரட்டை சாதனை படைத்த சுப்மன் கில், விருதுகளை குவித்து அசத்தல்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்துள்ளது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த அந்த தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் குஜராத்தை ரிசர்வ் நாளில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் அதன் சொந்த ஊரான அகமதாபாத்தில் எதிர்கொண்ட சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 214/4 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 (47) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் பெய்த மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26 (16) ரன்களும் டேவோன் கான்வே 47 (25) ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் சிவம் துபே 32* (21) ரகானே 27 (13) ராயுடு 19 (8) என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுக்க கடைசியில் மோகித் சர்மா வீசிய கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸரையும் பவுண்டரியும் பறக்க விட்ட ஜடேஜா சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

சாதனை கில்லி கில்:
அதனால் குஜராத் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டதால் 3 விக்கெட்டுகளை எடுத்து போராடிய மோஹித் சர்மா போராட்டமும் தமிழக வீரர் சாய் சுதர்சனின் போராட்டமும் வீணானது. அதை விட இந்த சீசனில் ஆரம்பம் முதலே அட்டகாசமாக செயல்பட்டு 3 சதங்களை விளாசி குஜராத் ஃபைனலுக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றிய நம்பிக்கை நட்சத்திர இளம் வீரர் சுப்மன் கில் போராட்டமும் வீணானது. குறிப்பாக ஃபைனலிலும் அதிரடியாக 39 (20) ரன்கள் எடுத்த அவர் ஜடேஜாவின் சுழலில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கால் அவுட்டானார்.

இருப்பினும் 17 போட்டிகளில் 890 ரன்கள் எடுத்த அவர் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து அதற்கான ஊதா தொப்பியை வென்றார். குறிப்பாக 2016இல் வெறித்தனமாக செயல்பட்டு 973 ரன்களை விளாசி ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள விராட் கோலியின் 973 ரன்கள் சாதனையை உடைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அதை தவற விட்டார்.

- Advertisement -

1. ஆனால் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் ஆல் டைம் சாதனையை உடைத்த அவர் புதிய வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 378 (2023)
2. விராட் கோலி : 364 (2016)
3. டேவிட் வார்னர் : 344 (2019)

2. அத்துடன் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற ஜோஸ் பட்லர் (863) சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். அதை விட ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர் என்ற ருதுராஜ் கைக்வாட் சாதனையையும் உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 23 வருடம் 263 நாட்கள்*
2. ருதுராஜ் கைக்வாட் : 24 வருடம் 257 நாட்கள்
3. ஷான் மார்ஷ் : 24 வருடம் 328 நாட்கள்

- Advertisement -

3. அது மட்டுமல்லாமல் தொடர் நாயகன் விருதையும் வென்ற அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சுனில் நரேன் சாதனையும் தகர்த்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2012 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சுனில் நரேன் தன்னுடைய 24 வயதில் முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்றதே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க:சி.எஸ்.கே டீம்ல விளையாடுன ராசி. மதீஷா பதிரானவுக்கு கை மேல் அடித்த ஜாக்பாட் – இலங்கை வாரியம் வெளியிட்ட அறிவிப்பு

4. மேலும் ஒரே சீசனில் ஆரஞ்சு தொப்பி மற்றும் தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் என்ற பெருமையை சச்சின் (2010) கிறிஸ் கெயில் (2011) விராட் கோலி (2016) ஜோஸ் பட்லர் (2022) ஆகியோருக்கு பின் பெற்றார். ஆனால் அந்த அனைவருமே அந்த சீசனில் தோல்வியை சந்தித்தனர் என்பது சோகமான வரலாறாகும்.

Advertisement