இந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளன. அதற்கு அடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டி தற்போது நான்கு அணிகளுக்கு இடையே பலமாக நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளை பெற்று இந்த தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது.
இருப்பினும் கடைசி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை நல்ல நம்பிக்கையுடன் முடிக்கும் எண்ணத்தில் காத்திருக்கிறது. இவ்வேளையில் பஞ்சாப் அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான காகிஸோ ரபாடா விலகியுள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி கால் தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ரபாடா சொந்த நாடு திரும்பிவிட்டார்.
இதன் காரணமாக இன்று நடைபெற இருக்கும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அடுத்ததாக நடைபெற இருக்கும் சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்காக இந்த ஆண்டு 11 போட்டியில் விளையாடிய அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடரானது அடுத்த மாதம் துவங்கவுள்ள வேளையில் அவரது உடற்தகுதியை தற்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழும் அவர் நிச்சயம் அந்த தொடருக்குள் தயாராக வேண்டி தற்போது அவருக்கு தீவிர சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்த வருஷமும் ஆர்சிபி’க்கு கப் கிடைக்காது.. அடுத்த வருஷம் அவங்களுக்கு சான்ஸ் கொடுத்தா ஜெயிக்கலாம்.. கைஃப்
இந்த ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த பல்வேறு நட்சத்திர வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் ரபாடா இடம் பிடித்துள்ள பஞ்சாப் அணி கடைசி இடத்தை பிடித்து வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.