
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 29ஆம் தேதி அகமதாபாத் நகரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 9வது லீக் போட்டியில் மோதின. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் – கேப்டன் சுப்மன் கில் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினர்.
பவர் பிளே ஓவர்கள் கடந்து 78 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த அந்த ஜோடியில் கில் 38 (27) ரன்கள் விளாசி ஹர்திக் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த ஜோஸ் பட்லர் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 39 (24) ரன்கள் குவித்து அவுட்டானார்.
அடுத்ததாக வந்த மற்றொரு தமிழக வீரர் சாருக்கான் 9 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சாய் சுதர்சன் அரை சதத்தை கடந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 63 (41) ரன்கள் எடுத்திருந்த போது ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
அவருக்கு அடுத்ததாக ரூதர்போர்ட் அதிரடியாக விளையாட முயற்சித்து 18 (11) ரன்னில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த ராகுல் திவாட்டியா பந்தை எதிர்கொள்ளாமலேயே பரிதாபமாக பாண்டியாவின் அபார த்ரோவால் டைமண்ட் டக் அவுட்டாகி சென்றார். இறுதியில் ரசித் கான் 6, ராபடா 7* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் குஜராத் 196-8 ரன்கள் எடுத்தது.
மும்பை அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதைத் தொடர்ந்து 197 எடுத்தால் தங்களது முதல் வெற்றியைப் பெறலாம் என்ற இலக்குடன் மும்பை பேட்டிங் செய்கிறது. முன்னதாக இந்தப் போட்டி நடைபெறும் உலகின் பெரிய அகமதாபாத் மைதானம் சுப்மன் கில்லுக்கு மிகவும் பிடித்த மைதானம் என்பதை தீவிரமான ரசிகர்கள் அறிவார்கள்.
இதையும் படிங்க: 2024 மிஸ்ஸாக இதான் காரணம்.. கேப்டனா இல்லனாலும் பழைய மும்பைக்கு கோப்பைகளை வெல்வேன்.. ரோஹித் உறுதி
ஏனெனில் இங்கே சர்வதேச முதல் ஐபிஎல் வரை அவர் நிறைய சதங்களையும் ரன்களையும் அடித்துள்ளார். அந்த வரிசையில் இந்தப் போட்டியில் அடித்த 38 ரன்களையும் சேர்த்து அகமதாபாத் மைதானத்தில் 1000 ஐபிஎல் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். 700+ ரன்களுடன் தமிழக வீரர் சாய் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதிலிருந்து அகமதாபாத் தம்முடைய கோட்டை என்பதை மீண்டும் கில் நிரூபித்துள்ளார்.