ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியுள்ளது. கடந்த வருடம் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.
இருப்பினும் அதன் பின் ரோகித் தலைமையில் 2 ஐசிசி கோப்பைகளை இந்தியா வெல்ல ஹர்திக் பாண்டியா உதவினார். அதனால் தற்போது பாண்டியாவுக்கு மும்பை ரசிகர்கள் ஆதரவு கொடுக்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்தியதால் கடந்த ஐபிஎல் தொடரில் தம்மால் அசத்த முடியவில்லை என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.
2024 மிஸ்ஸாக காரணம்:
எனவே கேப்டனாக இல்லாவிட்டாலும் இம்முறை முழுமையான கவனத்தை செலுத்தி பழைய மும்பையை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்து கோப்பைகளை வென்று கொடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி மும்பை இந்தியன்ஸ் தொலைக்காட்சியில் ரோஹித் பேசியது பின்வருமாறு. “2024 எங்களுடைய அணிக்கு சுமாரான தொடராகும். நாங்கள் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம் என்று நினைக்கவில்லை”
“அந்த ஐபிஎல் தொடருக்குப்பின் டி20 உலகக்கோப்பை வரவிருந்தது. அதுவே எனது கடைசி டி20 உலகக் கோப்பை என்பதால் அதில் முழுமையாக கவனம் செலுத்தி வெல்ல விரும்பினேன். மும்பை அணியில் விளையாடத் துவங்கியது முதல் தற்போது வரை நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அப்போது மிடில் ஆர்டரில் விளையாடிய நான் தற்போது துவக்க வீரராக விளையாடுகிறேன்”
ரோஹித் உறுதி:
“அப்போது கேப்டனாக இருந்த நான் இப்போது கேப்டனாக இல்லை. கோப்பைகளை வென்ற சில வீரர்கள் தற்போது இல்லை. அவர்கள் பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். அப்படி நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் எங்களது மனநிலையில் மாற்றம் இல்லை. இந்த அணிக்காக நான் செய்ய விரும்பும் விஷயங்களில் மாற்றம் ஏற்படவில்லை. அதாவது இந்த அணிக்காக களத்திற்கு சென்று போட்டிகளையும் கோப்பைகளையும் வெல்ல வேண்டும்”
இதையும் படிங்க: அதுல ஆர்சிபி 10 மடங்கு பெஸ்ட்டா அமைஞ்சுருக்கு.. கோப்பை ஜெயிக்க துவக்கம் கிடைச்சாச்சு.. ஏபிடி மகிழ்ச்சி
“அதற்குத் தான் மும்பை பெயர் போன அணியாகும். இத்தனை வருடங்களாக நாங்கள் யாருமே நம்ப முடியாத சூழ்நிலைகளை கடந்து போட்டிகளையும் கோப்பைகளையும் வென்றுள்ளோம். எனவே இது தான் மும்பை. மும்பை என்றால் கோப்பையில் வெல்வதற்கான அணி என்று பெயர் பெற்றது” எனக் கூறினார்.



