உருவான தரமான புதிய தலைமுறை.. 60 வருடங்கள் கழித்து இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த 2 அரிதான நிகழ்வு

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெறும் வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 399 என்ற பெரிய இலக்கை இங்கிலாந்து சேசிங் செய்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. எனவே அந்த அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இப்போட்டியில் களமிறங்கியுள்ள இந்தியா முதலில் பேட்டிங் செய்து ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்த உதவியுடன் 396 ரன்கள் சேர்த்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் தங்களுடைய முதல் இன்னிங்சில் 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜேக் கிராவ்லி 76, பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்களை எடுத்தார். அதன் பின் 143 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா போராடி 255 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அரிதான நிகழ்வு:
அதிகபட்சமாக சுப்மன் கில் 104 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 399 என்ற பெரிய இலக்கை துரத்தும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 67/1 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடி வருகிறது. தற்போதைய நிலைமையில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 332 ரன்களும் இந்தியாவின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகளும் தேவைப்படுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் மற்ற யாருமே 35 ரன்கள் கூட எடுக்காத நிலையில் ஜெய்ஸ்வால் மட்டும் தனி ஒருவனாக இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றினார். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் சதமடித்து 104 ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அந்த வகையில் 22 வயதாகும் ஜெய்ஸ்வால் மற்றும் 24 வயதாகும் கில் ஆகிய 2 இளம் வீரர்கள் இப்போட்டியில் இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள் என்றே சொல்லலாம். சொல்லப்போனால் இதன் வாயிலாக 27 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 25 வயதுக்கு உட்பட்ட 2 இந்திய வீரர்கள் சதமடிக்கும் அரிதான நிகழ்வு இப்போட்டியில் நடந்துள்ளது.

இதையும் படிங்க: முத்தம் கொடுத்து இரட்டைசதத்தை கொண்டாடியது ஏன்? ஒருவழியாக முடித்துவிட்ட – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இதற்கு முன் கடைசியாக 1999ஆம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி 25 வயதுக்குள் சதமடித்திருந்தார்கள். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 60 வருடங்கள் கழித்து ஒரே போட்டியில் 25 வயதிற்குட்பட்ட 2 இந்திய வீரர்கள் சதமும் இரட்டை சதமும் அடித்த நிகழ்வும் இப்போட்டியில் அரங்கேறியுள்ளது. இதற்கு முன் கடைசியாக 1964இல் இதே இங்கிலாந்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போட்டியில் 25 வயதுக்குள் மாக் பட்டோடி 203*, புத்தி குந்தேரன் 100 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement