IND vs WI : ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் தோற்க அந்த 2 இந்திய வீரர்கள் தான் காரணம் – வெ.இ கோச் வெளிப்படையான பாராட்டு

Phil Simmons
- Advertisement -

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து புதிய சாதனை படைத்தது. அந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய, வீரர்கள் இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதல் 2 போட்டிகளில் கடைசி ஓவரில் சிறப்பாக செயல்பட்டு திரில் வெற்றிகளை பெற்றது.

முதல் 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட போதிலும் கடைசி கட்ட நேரத்தில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் குறைந்தபட்சம் கடைசி போட்டியில் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்குமா என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மழைக்கு இடையே முதல் 2 போட்டிகளை விட படு மோசமாக செயல்பட்டு அந்த அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்து சொந்த மண்ணில் தலை குனிந்துள்ளது. ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட 2-வது தர இந்திய அணியிடம் சரணடைந்த வெஸ்ட் இண்டீஸ் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

- Advertisement -

அசத்திய இளம்படை:
அந்த அளவுக்கு முக்கிய வீரர்கள் இல்லாத குறையை தீர்க்கும் வகையில் இந்த தொடரில் கிடைத்த வாய்ப்பில் கிட்டத்தட்ட அனைத்து இளம் இந்தியர்களும் அற்புதமாக செயல்பட்டார்கள். குறிப்பாக பேட்டிங்கில் கேப்டன் ஷிகர் தவானுக்கு பாடம் சொல்லும் வகையில் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 3 போட்டிகளிலுமே தொடர்ச்சியாக நல்ல ரன்களை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

மிடில் ஆர்டரில் அக்சர் படேல் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் அசத்தி ஆல்-ரவுண்டர்களாக வெற்றிக்கு பங்காற்றினர். பந்துவீச்சில் சஹால், சிராஜ், ஷார்துல் தாகூர் ஆகியோர் தேவையான நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்து வெஸ்ட் இண்டீசை மடக்கி பிடித்தார்கள். இப்படி அனைத்து வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் எளிதான வெற்றி பெற்ற நிலையில் 3 போட்டிகளில் 205 ரன்களை குவித்த இளம் வீரர் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

சிமன்ஸ் பாராட்டு:
இந்நிலையில் ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைய சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவர் முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கும் அதன் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் ஷார்துல் தாகூர் உட்பட அனைவரும் இணைந்து செயல்பட்டதால் இந்தியாவை தங்களால் தோற்கடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி இந்த தொடர் முடிந்த பின் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஒருவர் கிடையாது, இருவர் உள்ளனர். பேட்டிங்கில் சுப்மன் கில் பந்துவீச்சில் முகமது சிராஜ் எங்களை தோற்கடித்து விட்டார்கள். சிராஜ் முதல் போட்டியில் கடைசி ஓவரை சிறப்பாக பந்துவீசினார். கடைசி போட்டியிலும் புதிய பந்தில் சிறப்பாக செயல்பட்டார். ஷார்துல் தாகூரும் கச்சிதமாக செயல்பட்டார். எங்களின் மொத்த ஆட்டத்தை விட இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல் முதல் போட்டியில் கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது சிறப்பாக செயல்பட்ட சிராஜ் கடைசி பந்தில் கச்சிதமாக செயல்பட்டு 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை த்ரில் வெற்றிபெற வைத்தார். அதேபோல் 3-வது போட்டியிலும் தனது முதல் ஓவரில் மேயர்ஸ், ப்ரூக்ஸ் ஆகிய 2 முக்கிய பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து டக் அவுட் செய்து மிரட்டினார். இதுபோக 3-வது போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு மழை மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது என்றாலும் அதற்காக தோல்வியின் பழியை மழைமேல் போட விரும்பவில்லை என்றும் பில் சிம்மன்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “மழை தன்னுடைய வேலையை செய்தது என்றாலும் அது இரு அணிகளுக்குமே பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே மழை குறுக்கிட்டது தோல்விக்கு காரணம் என்று நான் கூற விரும்பவில்லை. சேசிங் செய்யும் போது நாங்கள் அதிகப்படியான விக்கெட்டுகளை இழந்து விட்டோம். கடைசி 10 ஓவர்களுக்கு முன்பாக வெற்றியை எட்டிப் பிடிக்கும் நிலையில் நாங்கள் இருந்தாலும் விக்கெட்டுகள் கையில் இல்லாமல் போய்விட்டது” என்று கூறினார்.

இதையும் படிங்க: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெறும் 1 போட்டியில் விளையாடி காணாமல் போன 5 இந்திய வீரர்களின் பட்டியல்

இந்த தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக நடைபெறும் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட முயற்சிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement