சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெறும் 1 போட்டியில் விளையாடி காணாமல் போன 5 இந்திய வீரர்களின் பட்டியல்

Tyagi
- Advertisement -

கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற மிகப்பெரிய லட்சியத்துடன் சிறு வயதில் பள்ளி அளவிலேயே பயிற்சிகளைத் தொடங்கும் வீரர்கள் அதில் சிறப்பாக செயல்பட்டு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட தொடங்குவார்கள். அதில் தேசிய அணிக்காக விளையாடும் அளவுக்கு தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்க தொடர்ச்சியாக கடினமாக உழைத்து சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. அப்படி கடின உழைப்பின் பயனாக ஒரு கட்டத்தில் தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்து தேசிய அணிக்காக விளையாட தேர்வாகும் தருணமே ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்நாளில் சந்திக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்.

இருப்பினும் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு உலகத்தரம் வாய்ந்த சீனியர் வீரர்களுக்கு மத்தியிலும் நிலையான இடத்தைப் பிடித்துள்ள முக்கிய வீரர்களுக்கு மத்தியிலும் நேரடியாக 11 பேர் அணியில் வாய்ப்பு பெறுவது கடினமான ஒன்றாகும். எனவே சில வீரர்களை தவிர பெரும்பாலான வீரர்கள் முதல் வாய்ப்புக்காக பெஞ்சில் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். அதிலும் இந்தியா போன்ற உலகத்தரம் வாய்ந்த அணியில் எப்போதுமே நட்சத்திர வீரர்கள் இருப்பார்கள் என்பதால் பெரும்பாலான இளம் வீரர்கள் ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக அறிமுகமாகும் வாய்ப்பை பெறுவார்கள்.

- Advertisement -

முதலும் கடைசியுமாய்:
ஆனால் எந்த அணிக்கு எதிராக வாய்ப்பு பெற்றாலும் ஆரம்பத்திலேயே அசத்தலாக செயல்பட்டு அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டியது அந்த வாய்ப்பைப் பெறும் இளம் வீரரின் பொறுப்பாகும். இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கும் என்ற நிலையில் கனவு இந்திய தொப்பியை பெற்று உணர்ச்சி பொங்க விளையாடும் இளம் வீரர்களுக்கு அறிமுக போட்டியிலேயே சிறப்பாக செயல்பட முடியாமல் அழுத்தம் தடுக்கும்.

அதைத்தாண்டி சிறப்பாகச் செயல்பட்டால்தான் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற முடியும். ஆனால் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட ஆரம்பத்திலேயே தடுமாறுவார்கள் என்ற நிலைமையில் அறிமுகப் போட்டியில் மோசமாக செயல்பட்டாலோ அல்லது அடுத்த போட்டியில் நட்சத்திர வீரர்கள் திரும்பினாலோ வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக முதலும் கடைசியுமாக விளையாடிய 5 வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. சுதீப் தியாகி: 2008 போன்ற காலகட்டத்தில் ரஞ்சி கோப்பையில் அசத்திய இவர் 2009இல் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். அதனால் அதே வருடம் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான அவர் 2 ஓவர்களில் 21 ரன்களை வாரி வழங்கினார்.

அதன் காரணமாக அதன்பின் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறாத அவர் 4 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி கடந்த 2020இல் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

4. ஸ்ரீநாத் அரவிந்த்: எப்போதுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சமாக காணப்படும் இந்திய அணியில் அதற்கு தீர்வாக கடந்த 2011இல் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அசத்திய இவர் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பை பெற்றார். ஆனால் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு பெறாத இவர் ஒரு வழியாக கடந்த 2015இல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகி அதன் கேப்டன் டு பிளேஸிஸ் விக்கெட்டை எடுத்தார்.

ஆனால் 3.4 ஓவரில் 44 ரன்களை 12.00 என்ற எக்கனாமியில் வாரி வழங்கியதால் அடுத்த போட்டியிலேயே அதிரடியாக நீக்கப்பட்ட அவர் அதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினாலும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை கடைசிவரை பெறாமல் 2018இல் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

3. பவன் நேகி: 2015 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் சுழல்பந்து ஆல்-ரவுண்டராக அசத்திய இவர் 2016 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக 8.5 கோடிக்கு வாங்கப்பட்டார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் தடுமாறிய அவர் 2017இல் பெங்களூர் அணியில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார்.

அதற்கிடையே 2016இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் கத்துக்குட்டியான ஐக்கிய அரபு நாடுகளுக்கு எதிராக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்று 3 ஓவரில் 16 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து சிறப்பாகவே பந்து வீசினார். இருப்பினும் அடுத்தகட்ட போட்டிகளில் முக்கிய வீரர்கள் வந்ததாலும் அதிர்ஷ்டமின்மை காரணத்தாலும் அதன்பின் நடந்த ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதாலும் அதுவே அவர் இந்தியாவுக்காக விளையாடும் முதலும் கடைசி போட்டியாக அமைந்தது.

2. பர்வேஸ் ரசூல்: உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2017இல் இங்கிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடந்த டி20 போட்டியில் அறிமுகமான இவர் ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்காக விளையாடிய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

அப்போட்டியில் 32 ரன்களைக் கொடுத்து இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் விக்கெட்டை எடுத்த அவருக்கு அதன்பின் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்காமலே போனது. ஏனெனில் ஐபிஎல் தொடரிலும் அவரை யாரும் வாங்காத நிலையில் அதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டிலும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

1. மயங் மார்கண்டே: பஞ்சாப்பை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளரான இவர் கடந்த 2018 ஐபிஎல் தொடரில் மும்பைக்கு அறிமுகமாகி சென்னை கேப்டன் எம்எஸ் தோனியை தனது முதல் விக்கெட்டாக எடுத்து அந்த சீசன் முழுவதும் அபாரமாக செயல்பட்டார். அதனால் அதே வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் ஒரு போட்டியில் அறிமுகமாகி விக்கெட் எடுக்காமல் 31 ரன்களைக் கொடுத்த அவருக்கு அதன்பின் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் தற்போது 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் சமீப காலங்களில் மும்பை, பஞ்சாப் போன்ற அணிகளில் விளையாடி வருகிறார். இவரது பக்கம் வயது இன்னும் இருப்பதால் வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட்டால் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement