அவரோட பேட்டிங் நம்பமுடியாத வகையில் இருந்தது. மும்பையை வீழ்த்திய பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் மகிழ்ச்சி

Shreyas-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்ட லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் நேற்று புனே மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டி மும்பை அணிக்கு முக்கியமான போட்டி என்பதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் போட்டியிலும் தோல்வி அடைந்து மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தற்போது மும்பை அணியின் ரசிகர்கள் பெரிய வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

MI vs KKR

- Advertisement -

அதேவேளையில் இந்தத் தொடர் ஆரம்பத்திலிருந்தே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருகிறது. நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 161 ரன்கள் குவித்த நிலையில் பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இது ஒரு டீசன்டான இலக்கு என்பதால் போட்டி இறுதி வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் கொல்கத்தா அணி சேசிங் செய்தபோது அடுத்தடுத்த சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விட்டதால் இந்த போட்டி இறுதி நேரத்தில் படு சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரசல் அவுட் ஆனதற்கு பிறகு களமிறங்கிய பேட் கம்மின்ஸ் போட்டியை தலைகீழாக மாற்றிவிட்டார் என்றே கூறலாம்.

MI vs KKR Pat CUmmins Venkatesh Iyer

ஏனெனில் தான் சந்திக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட பேட் கம்மின்ஸ் வெகு எளிதாக மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு வெற்றியை பரிசளித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பேட் கம்மின்ஸ் 15 பந்துகளை சந்தித்து 6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரி என 56 ரன்கள் குவித்து அசத்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்நிலையில் இந்தப் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே நம்ப முடியாத வகையில் பேட் கம்மின்ஸ் இந்த போட்டியில் பேட்டிங் செய்தார். ஏனெனில் வலைப்பயிற்சியில் எனது அருகில் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்த போது கூட நிறைய முறை ஆட்டமிழந்தார். ஆனால் இன்று அவர் விளையாடிய விதம் பிரமிக்கும் விதமாக இருந்தது. நான் ஆட்டமிழந்து வெளியேறியபோது வெங்கடேஷ் ஐயரிடம் தொடர்ந்து விளையாடி போட்டியின் இறுதி வரை இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு வந்தேன். ஆனால் கம்மின்ஸ் பேட்டிங் செய்ய வந்தவுடன் அனைத்தையும் மாற்றி விட்டார்.

இதையும் படிங்க : அவரு இப்படி பண்ணுவார்னு நான் நெனச்சி கூட பாக்கல. ஹாட்ரிக் தோல்விக்கு பிறகு – ரோஹித் சர்மா வருத்தம்

அவர் பேட்டிங் செய்த விதம் மும்பை அணியை எளிதில் வீழ்த்த உதவியது. இருப்பினும் இந்த போட்டியில் எங்களது டாப் ஆர்டர் வீரர்கள் இன்னும் சரியாக செயல்படவில்லை. எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் மிகப்பெரிய சிக்சர்களை அடிக்கும் திறன் உடையவர்கள். நிச்சயம் இனிவரும் போட்டிகளிலும் இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement