
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த சில ஆண்டுகளாகவே தனது அற்புதமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் யுவராஜ் சிங் எப்படி மிடில் ஆர்டரில் நம்பிக்கையான வீரராக இருந்தாரோ அதேபோன்று தற்போது நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அதிலும் குறிப்பாக 2023 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு ஷ்ரேயாஸ் ஐயரின் பங்கு முக்கியம் என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு அவர் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பலம் சேர்த்துள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியை கேப்டனாக வழிநடத்திய அவர் கோப்பையை கைப்பற்றி தந்து அசத்தினார்.
அதோடு இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவர் அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். அதுமட்டும் இன்றி உள்ளூர் போட்டிகளிலும் மும்பை அணிக்காக பல்வேறு கோப்பைகளை வென்று கொடுத்த அவர் சிறந்த கேப்டனாகவும் தனது திறனை வெளிக்காட்டி உள்ளார். தற்போது ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் வேளையில் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் பட்சத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக வரவும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டு வருகிறது.
தற்போது மும்பையில் நடைபெற்று வரும் டி20 தொடரில் சோபா மும்பை பால்கன்ஸ் என்கிற அணியை கேப்டனாக வழிநடத்தி வரும் அவர் அரையிறுதி போட்டிக்கும் அழைத்துச் சென்றுள்ளார். இப்படி தனது சிறப்பு சிறப்பான கேப்டன்சியை அவர் நாளுக்கு நாள் வெளிப்படுத்தி வரும் வேளையில் தனது இந்த சிறப்பான கேப்டன்சிக்கு என்ன காரணம்? என்பது குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கேப்டன்சி என்பது நிறைய முதிர்ச்சியையும், பொறுப்பையும் கொண்டு வருகிறது. அணிக்கு சிறந்த முறையில் பங்களிப்பை வழங்க ஒரு கேப்டன் எப்போதும் விரும்புவார்கள். அந்த வகையில் கேப்டன்சி பொறுப்பை கையில் எடுத்து எனது அணிக்கு பங்களிப்பை வழங்க நான் விரும்புகிறேன்.
இதையும் படிங்க : கிளவுஸை தூக்கி எறிந்து அம்பயர் மீது கோபத்தை கக்கிய அஸ்வின்.. தண்டனையை அறிவித்த டிஎன்எல்பில் நிர்வாகம்
எப்பொழுதுமே ஒரு அணி பெரிய தடையையோ அல்லது சரிவையோ சந்திக்கும் போது அனைவரும் கேப்டனை நோக்கி தான் செல்வார்கள். நான் 22 வயதிலிருந்து கேப்டனாக இருந்து வருவதால் நிறைய அனுபவம் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன். அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொரு அணியையும் நான் சிறப்பாக வழிநடத்தி வருகிறேன் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.