ஐபிஎல் 2025 ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெற்ற 22வது போட்டியில் சென்னை 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. முள்ளான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு ஒரு பக்கம் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் மறுபுறம் அவர்களுக்கும் சேர்த்து அதிரடியை நிறுத்தாத 24 வயது இளம் துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா 103 (42) ரன்கள் விளாசி சென்னையை தெறிக்க விட்டார்.
கடைசி நேரத்தில் சசாங் சிங் 52* (36), மார்கோ யான்சென் 34* (19) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் பஞ்சாப் 220 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக விளையாடிய சென்னை முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 201-5 ரன்கள் மட்டுமே எடுத்து தங்களது 4வது தோல்வியை பதிவு செய்தது. அந்த அணிக்கு ரச்சின் 36, கான்வே 69* ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் வெற்றி:
சிவம் துபே 42, தோனி 27 ரன்கள் எடுத்த போதிலும் ஃபினிஷிங் செய்ய தவறினார்கள். அதனால் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த பஞ்சாப்புக்கு லாக்கி பெர்குசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்நிலையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடி பெரிய ரன்கள் குவிப்பதே பஞ்சாப் அணியின் டெம்ப்ளேட் என்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
மேலும் கடந்தப் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சரை எதிர்கொண்டது இந்தப் போட்டியில் பிரியான்ஸ் ஆர்யா சதமடிக்க உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எந்த கிரிக்கெட் மைதானத்தில் விளையாடினாலும் இது தான் எங்களுடைய டெம்ப்ளேட்டாக இருக்கும். எங்களிடம் வலுவான ஹிட்டர்கள் இருக்கிறார்கள். பிரியான்ஸ் விளையாடியதை பார்த்தது அபாரமாக இருந்தது”
இதான் டெம்ப்ளேட்:
“கடந்தப் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சரை எதிர்கொண்ட போது முடிவு எடுப்பதில் கொஞ்சம் தடுமாறிய அவரிடம் நான் பேசினேன். அதை வைத்து இன்று தனது உள்ளுணர்வுகளை பின்பற்றி சுதந்திரமாக விளையாடிய அவரைப் போன்ற மனநிலையை எங்கள் வீரர்கள் அனைவரும் கொண்டிருக்க விரும்புகிறேன். அது ஐபிஎல் தொடரில் விளையாடப்பட்ட டாப் இன்னிங்ஸ்”
இதையும் படிங்க: வரிசையா 4 மேட்ச்ல சிஎஸ்கே தோற்க இது மட்டுமே காரணம்.. பிரியான்ஸ் அசத்திட்டாரு.. ருதுராஜ் பேட்டி
“துபே, கான்வே ஆகியோர் தொடர்ச்சியாக விளையாடியதால் சஹாலை நிறுத்தி வைத்திருந்தோம். ஒருவேளை அவர் பவுலிங் செய்தால் துபே எவ்வளவு அதிரடியாக அடிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் சஹாலை கொஞ்சம் தாமதப்படுத்தியது எங்களுக்கு வேலை செய்தது. கேட்ச்கள் தவற விட்டது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். எங்களுடைய சிறந்த ஆட்டத்தை இன்னும் நாங்கள் ஆரம்பிக்கவே இல்லை. இது தொடரின் துவக்கம் என்பதால் கொஞ்சம் பதற்றம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பயமின்றி நாங்கள் விளையாட வேண்டும். அதையும் தாண்டி இந்தப் போட்டியை வென்றது முக்கியம்” எனக் கூறினார்.



