
இந்திய கிரிக்கெட் அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் 2017ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆரம்பக் காலங்களில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு 3 வகையான இந்திய அணியும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. நாளைடைவில் ஸ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக பலவீனத்தைக் கொண்டுள்ளார் என்பது எதிரணிகளுக்கு அம்பலமானது.
ஏனெனில் உயரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்கத் தடுமாறிய அவர் தன்னுடைய விக்கெட்டை இழந்தார். குறிப்பாக கொல்கத்தா அணியில் பயிற்சியாளராக இருந்த போது பிரண்டன் மெக்கல்லம் அவருடைய அந்த பலவீனத்தை தெரிந்து வைத்திருந்தார். அதனால் 2021 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் பேட்டிங் செய்ய வந்ததும் மெக்கல்லம் பால்கனியில் அமர்ந்து கொண்டு ஒற்றை சைகையால் ஷார்ட் பந்தை போடச் சொல்லி அவுட்டாக்கினார்.
அப்போதிலிருந்து ஸ்ரேயாஸ் வந்தாலே எதிரணிகள் அந்த பந்தை போட்டு காலி செய்தன. அதனால் பெரிய விமர்சனங்களை சந்தித்த அவர் அதற்காக அசராமல் தேவையான பயிற்சிகளை எடுத்து 2023 உலகக்கோப்பையில் ஷார்ட் பந்துகளை நன்றாக எதிர்கொண்டு 500+ ரன்கள் அசத்தினார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
இந்நிலையில் இவரால் ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்க முடியாது என்று விமர்சித்த வாய்களை பொய்யாக்குவதற்காக கடினமானப் பயிற்சிகளை எடுத்ததாக ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். நாளடைவில் அந்த பலவீனத்தை சரி செய்து சாம்பியன்ஸ் ட்ராபியில் அசத்தியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆரம்பத்தில் அது ஏற்ற இறக்க பயணமாக இருந்தது. அப்போதெல்லாம் கட்டுக்கோப்புடன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென என்னை நானே தீர்மானித்துக் கொண்டேன்”
“மும்பை அணிக்காக ரஞ்சி, விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி கோப்பைகளில் விளையாடினேன். அந்த அனைத்து தொடர்களிலும் அசத்தியது சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் எனக்கு பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்தது. அதிர்ஷ்டவசமாக அத்தொடருக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் நான் என்னுடைய முத்திரையைப் பதித்தேன். கடந்த சில வருடங்களாக என்னால் குறிப்பிட்ட ஷாட்டை அடிக்க முடியாது என்ற பேச்சுக்கள் இருந்தன”
இதையும் படிங்க: எனக்கு அந்த டீமை ரொம்ப புடிக்கும்.. சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது குறித்து – ரோஹித் சர்மா
“எனவே கம்பேக் கொடுத்த போது நான் விமர்சித்தவர்களைப் பொய்யாக்க விரும்பினேன். அதற்காக உழைத்த நான் என்னை நானே கடினமான சூழ்நிலைகளுக்குள் உட்படுத்தி பவுலர்களுக்கு எதிராக அந்த ஷாட்டை அடிக்க விரும்பினேன். அதில் முன்னேறியது அனைத்தும் பயிற்சியைப் பொருத்தது. அந்த ஷாட்டில் நீங்கள் கடினமான பவுலர்களுக்கு எதிராக அதிகமானப் பயிற்சி எடுக்கும் போது நிறைய தன்னம்பிக்கைக் கிடைக்கும்” என்று கூறினார்.