ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெற்ற 60வது போட்டியில் டெல்லியை 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அதையும் சேர்த்து 9 வெற்றிகளைப் பெற்ற குஜராத் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கூடவே தலா 17 புள்ளிகளைப் பெற்றுள்ள பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
அதில் பஞ்சாப் கிங்ஸ் 11 வருடங்கள் கழித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் பேட்டிங் துறையில் அதிரடியாக விளையாடும் அவர் இதுவரை 435* ரன்களை அடித்து வெற்றியில் பங்காற்றி வருகிறார்.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்:
அத்துடன் கேப்டனாக சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து சிறப்பாக வழி நடத்தும் அவர் முக்கிய முடிவுகளை கச்சிதமாக எடுத்து வெற்றிக்கு வித்திடுகிறார். முன்னதாக 2020 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த வருடம் மிகச்சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த அவர் டெல்லி அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற வைத்தார்.
அதுவே ஐபிஎல் வரலாற்றில் டெல்லி விளையாடிய ஒரே இறுதிப் போட்டியாகும். பின்னர் காயமடைந்த அவரை டெல்லி அணி கழற்றி விட்டது. அடுத்ததாக கொல்கத்தா அணி அவரை பெரிய தொகைக்கு வாங்கி தங்களுடைய கேப்டனாக நியமித்தது. அங்கே 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் 10 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார்.
26.75 கோடிக்கு ஒர்த்:
இந்த வருடம் பஞ்சாப் அணி அவருடைய தலைமையில் 11 வருடங்கள் கழித்து பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. மொத்தத்தில் டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 3 வெவ்வேறு அணிகளை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பிளே ஆஃப் சுற்றுக்கு (2020, 2024, 2025) அழைத்துச் சென்றுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் 3 வெவ்வேறு அணிகளை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற தனித்துவமான சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: தோனியை குறை சொன்ன.. கம்பீர் மாதிரி.. ஸ்ரேயாஸ் ஐயர் க்ரெடிட்டை பாண்டிங் வாங்கல.. கவாஸ்கர் பேட்டி
அவரைத் தவிர்த்து வேறு எந்த கேப்டனும் 3 அணிகளை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றதில்லை. இதைப் பார்க்கும் ரசிகர்கள் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல உதவிய ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடி ரூபாயில் ஒவ்வொரு ரூபாய்க்கும் தகுதியானவர் என்று பாராட்டுகின்றனர். இதைத் தொடர்ந்து அவரது தலைமையில் பஞ்சாப் கோப்பையை வெல்வதற்கு தயாராகி வருகிறது.



