ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 2 போட்டியில் மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. ஜூன் 1ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 204 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 44, திலக் வர்மா 44, ஜானி பேர்ஸ்டோ 38, நமன் திர் 37 ரன்களை எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய பஞ்சாப்புக்கு பிரப்சிம்ரன் சிங் 6, பிரியான்ஸ் ஆர்யா 20 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் மிடில் ஆடரில் அற்புதமாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்தில் அரை சதத்தை அடித்தார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய அவர் 5 பௌண்டரி 8 சிக்சர்களைப் பறக்க விட்டு 87* (41) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.
ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ்:
அவருடன் ஜோஸ் இங்லிஷ் 38, நேஹல் வதேரா 48 ரன்களை எடுத்து கை கொடுத்தனர். அதனால் 19 ஓவரிலேயே 207/5 ரன்களை எடுத்த பஞ்சாப் 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. மறுபுறம் அஸ்வனி குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைச் சந்தித்த மும்பை தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இப்போட்டியின் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் (87*) அடித்த இந்தியாவை சேர்ந்த கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2022 எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் 79 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
2 அபார சாதனைகள்:
ஒட்டுமொத்தமாக ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய படைத்துள்ளார். இதற்கு முன் 2009 ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிரான செமி ஃபைனலில் டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டன் கில்கிறிஸ்ட் 85 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இந்த சாதனைப் பட்டியலின் முதலிடத்தில் டேவிட் வார்னர் (2016 குவாலிபயர் 2 போட்டியில் மும்பைக்கு எதிராக 93* ரன்கள்) உள்ளார்.
இதையும் படிங்க: போரில் தோற்கல.. 3 ஃபைனல்.. சொன்னதை செய்த ஸ்ரேயாஸ் ஐயர்.. எந்த கேப்டனும் செய்யாத தனித்துவ சாதனை
இது போக ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணிக்காக ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற மேக்ஸ்வெல் சாதனையையும் உடைத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஸ்ரேயாஸ் ஐயர் : 38* (2025)
2. கிளன் மேக்ஸ்வெல்: 36 (2014)
3. கிறிஸ் கெய்ல்/லியம் லிவிங்ஸ்டன்: தலா 34 (2019)/(2022)



