போரில் தோற்கல.. 3 ஃபைனல்.. சொன்னதை செய்த ஸ்ரேயாஸ் ஐயர்.. எந்த கேப்டனும் செய்யாத தனித்துவ சாதனை

Shreyas Iyer
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது. அதனால் ஜூன் இரண்டாம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ள பஞ்சாப் தகுதி பெற்றது. அகமதாபாத் நகரில் ஜூன் 1ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 204 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 44, திலக் வர்மா 44, ஜானி பேர்ஸ்டோ 38, நமன் திர் 37 ரன்களை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய பஞ்சாப் 19 ஓவரிலேயே 207/5 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 87* (41) ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

போரில் தோற்கல:

அவருடன் ஜோஸ் இங்லிஷ் 38, நேஹல் வதேரா 48 ரன்களை அடித்து வெற்றியில் பங்காற்றினர். இந்த தோல்வியால் 6வது கோப்பையை வெல்லும் கனவை இழந்த மும்பை தொடரிலிருந்து வெளியேறியது. முன்னதாக ஐபிஎல் தொடரில் 2008 முதலே தடுமாற்றமாக விளையாடிய பஞ்சாப் தொடர்ச்சியாக பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெற முடியாமல் திண்டாடி வந்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இம்முறை 26.75 கோடி என்ற பிரம்மாண்டத் தொகைக்கு ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கிய பஞ்சாப் தங்களுடைய கேப்டனாக நியமித்தது. சமீபத்தில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல அதிக ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அவர் இத்தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி 603* ரன்களை குவித்து பேட்ஸ்மேனாக பஞ்சாப் வெற்றியில் பங்காற்றி வருகிறார். அதே போல கேப்டனாகவும் சரியான வீரர்களைத் தேர்ந்தெடுத்த அவர் பஞ்சாப்பை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

- Advertisement -

சொன்னதை செய்த ஸ்ரேயாஸ்:

அவருடைய தலைமையில் 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆனால் குவாலிபயர் 1 போட்டியில் பெங்களூருவிடம் போராடாமலேயே பஞ்சாப் தோற்றது. அப்போட்டியின் முடிவில் “குவாலிபயர் 1 போட்டியில் தான் தோற்றமே தவிர, ஐபிஎல் 2025 போரில் தோற்கவில்லை” என்று ஸ்ரேயாஸ் தெரிவித்திருந்தார்.

தற்போது குவாலிபயர் 2 போட்டியில் வென்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் சொன்னதை செய்து பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாட அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே 2020ஆம் ஆண்டு வரலாற்றில் முதலும் கடைசியுமாக டெல்லியை கேப்டனாக அவர் ஐபிஎல் ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். 2024 சீசனில் கொல்கத்தாவையும் கேப்டனாக ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற அவர் கோப்பையையும் வென்று சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: ஆர்சிபி’யை நோக்கி வரோம்.. இன்னும் முடியல.. தோல்விக்கு பின் இதை செஞ்சு கம்பேக் கொடுத்துருக்கோம்.. ஸ்ரேயாஸ் பேட்டி

தற்போது பஞ்சாப்பையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற தனித்துவமான சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். அவரைத் தவிர்த்து வேறு எந்த கேப்டனும் இப்படிப்பட்ட சாதனையைப் படைத்ததில்லை.

Advertisement