67 பந்தில் சதம்.. கில்கிறிஸ்டின் மாஸ் சாதனையை உடைத்த ஸ்ரேயாஸ் புதிய உலக சாதனை

- Advertisement -

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 47, கில் 80*, விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105, கே.எல் ராகுல் 39* ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 2 விக்கெட் எடுத்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த நியூசிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் சாதனை:
அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 69, டார்ல் மிட்சேல் சதமடித்து 134 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை எடுத்து ஐசிசி நாக் அவுட் போட்டியில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடிக்க உதவி ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்த வகையில் இப்போட்டியில் அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பாக விளையாடிய நிலையில் மிடில் ஆர்டரில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 2வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் சேர்ந்து 256 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரி 8 சிக்ஸருடன் 105 (70) ரன்கள் விளாசினார்.

குறிப்பாக 67 பந்துகளில் 100 ரன்கள் கடந்த அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு நாக் அவுட் போட்டியில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன் கடந்த 2007 உலகக்கோப்பை ஃபைனலில் இலங்கைக்கு எதிராக ஆடம் கில்கிறிஸ்ட் 72 பந்துகளில் சதமடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் நெதர்லாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் 128* ரன்கள் அடித்திருந்து அவர் இந்த போட்டியில் 105 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 2 சதங்கள் அடித்த முதல் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: நீங்கள் கடவுளின் குழந்தை.. விராட் கோலியின் 50 ஆவது சதத்திற்கு பிறகு – அனுஷ்கா சர்மா உருக்கமான பதிவு

இதற்கு முன் யுவராஜ் சிங் உட்பட வேறு எந்த இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் உலகக் கோப்பையில் ஒரு தொடரில் இப்படி 2 சதங்களும் அடுத்தடுத்த போட்டிகளில் சதங்களும் அடித்ததில்லை. அந்த வகையில் ஷார்ட் பால் பலவீனத்தைக் கொண்டிருந்ததால் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று எழுந்த விமர்சனங்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சாதனைகளால் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி பதிலடி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement