தோனி – ரெய்னா ஜோடியை முந்திய ஸ்ரேயாஸ் – ராகுல் ஜோடி.. பார்ட்னர்ஷிப் போடுவதில் இரட்டை உலக சாதனை

Shreys Iyer KL Rahul
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தினத்தன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. பெங்களூரு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் 61, கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128*, கேஎல் ராகுல் 102 ரன்கள் எடுத்த உதவியுடன் 411 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய நெதர்லாந்து முடிந்த அளவுக்கு போராடியும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தேஜா நிதமன்று 54 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ், பும்ரா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

உலக சாதனை ஜோடி:
அந்த வகையில் 9 லீக் போட்டிகளிலும் 9 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற அணியாக சாதனை படைத்த இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணி என்பதையும் நாக் அவுட் சுற்றில் அசத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் காட்டியது. இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றிய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் – கேஎல் ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி இந்தியா 410/4 ரன்கள் குவிப்பதற்கு முக்கிய பங்காற்றினர்.

குறிப்பாக 4வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலக சாதனை படைத்தது. இதற்கு முன் இதே நெதர்லாந்துக்கு எதிராக 2007 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் மற்றும் ப்ராட் ஹோட்ஜ் ஆகியோர் 204 ரன்கள் குவித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

இது போக இந்த 208 ரன்களை 9.82 என்ற ரன் ரேட்டில் குவித்த இந்த ஜோடி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்ரேட்டில் இரட்டை சத பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் – ஜேபி டுமினி சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. ஸ்ரேயாஸ் ஐயர் – கேஎல் ராகுல் : 9.82, நெதர்லாந்துக்கு எதிராக, 2023*
2. ஜேபி டுமினி – டேவிட் மில்லர் : 8.62, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, 2015
3. விராட் கோலி – வீரேந்திர சேவாக் : 8.40, வங்கதேசத்துக்கு எதிராக, 2011

இதையும் படிங்க: இந்த சான்ஸை விட்டா.. அடுத்த 12 வருசத்துக்கு உ.கோ ஜெயிக்க முடியாது.. காரணம் அது தான்.. சாஸ்திரி எச்சரிக்கை

அத்துடன் உலக கோப்பையில் 4வது அல்லது அதற்கு கீழான விக்கெட்டுக்கு இரட்டை சதம் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி என்ற சாதனையும் அவர்கள் படைத்தனர். இதற்கு முன் கடந்த 2015 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு 196* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement