ஒவ்வொரு மேட்ச்லயும் எதிரணிகளை அடிச்சு நொறுக்கி அழிக்கிறாரு.. இந்திய வீரருக்கு அக்தர் அதிரடி பாராட்டு

Shoaib Akhtar 2
Advertisement

ரசிகர்களை மகிழ்வித்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 47, கில் 80*, ஸ்ரேயாஸ் ஐயர் 105, விராட் கோலி 117, ராகுல் 39* ரன்கள் எடுத்த உதவியுடன் 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த நியூசிலாந்துக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 69, டார்ல் மிட்சேல் 134 ரன்கள் எடுத்த போதிலும் 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சோயப் அக்தர் பாராட்டு:
இந்நிலையில் இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை அவருக்கு முன்பே உடைத்த விராட் கோலி சிறப்பாக விளையாடியதாக சோயப் அக்தர் பாராட்டியுள்ளார். ஆனால் அவரை விட ஒவ்வொரு போட்டியிலும் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து வரும் ரோஹித் சர்மா எதிரணிகளை அடித்து நொறுக்கி அழித்து வருவதாக அவர் வித்தியாசமான பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்தை மொத்தமாக இந்தியா அடித்து நொறுக்கியது. குறிப்பாக ட்ரெண்ட் போல்ட் மற்றும் மிட்சேல் சான்ட்னர் ஆகியோரிடம் எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது அதை இப்போது சரி செய்வோம் என்பது போல் ரோகித் சர்மா அபாரமாக விளையாடினார். ஆனால் அவர் சதமடிக்காதது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த உலகக் கோப்பையில் அவர் இன்னும் சில சதங்கள் அல்லது செமி ஃபைனலில் அரை சதமடித்திருக்கலாம்”

- Advertisement -

“ஆனால் அதைப் பற்றி கவலைப்படாத அவர் அதை ஃபைனலில் செய்வதற்கு வாய்ப்புள்ளது. கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக ரோகித் சர்மாவுக்கு இந்த வெற்றிகளுக்கான பாராட்டுகளை கொடுக்க வேண்டும். ஏனெனில் ஆரம்பத்திலேயே அவர் சரமாரியாக அடித்து நொறுக்கி எதிரணிகளை ஒழிக்கிறார். சுப்மன் கில் நன்றாக விளையாடி சதத்தை நெருங்கும் வாய்ப்பை பெற்ற போதிலும் காய்ச்சலால் இன்னும் குணமடையாமல் தவற விட்டார்”

இதையும் படிங்க: விராட் கோலி கீழ விழுந்தா விழட்டும்.. ஏன் அதை பண்ணீங்க.. நியூஸிலாந்து அணியை விமர்சித்த முன்னாள் ஆஸி வீரர்

“இறுதியில் இவை அனைத்தும் விராட் கோலியை நோக்கி சென்றது. குறிப்பாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவரின் முன்பே விராட் கோலி உடைத்தார். மேலும் சச்சினின் சாதனையை உடைத்த பின் அவர் சச்சினுக்கு தலை வணங்கி மரியாதையை செய்ததை பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறினார். இதை தொடர்ந்து ஃபைனலிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல இந்தியா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement