34 வயதாகி விட்டதால் அதை செஞ்சா ஈஸியா சச்சினை முந்தி 100 சதங்கள் அடிக்கலாம் – விராட் கோலிக்கு அக்தர் கோரிக்கை

Kohli and Akhtar
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் கேப்டன் தோனியின் ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக 2013இல் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்கு பின் அவரது இடத்தில் அவரைப் போலவே ரன் மெஷினாக உலகின் அனைத்து இடங்களிலும் டாப் பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

Virat Kohli 46

- Advertisement -

முன்னதாக தனது 31 வயதிலேயே 70 சதங்களை அசால்டாக அடித்த அவர் சச்சினின் 100 சதங்கள் சாதனையை நிச்சயம் உடைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பகலானால் இரவு வரும் என்று இயற்கையின் நியதிக்கேற்ப 2019க்குப்பின் ஃபார்மை இழந்து தடுமாறிய அவர் அதற்காக அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனங்களை சந்தித்து ஒரு வழியாக 1020 நாட்கள் கழித்து கடந்த 2022 ஆசியக் கோப்பையில் 71வது சதமடித்தார். அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அசத்தலாக செயல்பட்டு கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற வங்கதேசம் மற்றும் இலங்கை ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த சதங்களை விளாசினார்.

34 வயதாகி விட்டது:
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்து அவர் சச்சினின் 100 சதங்கள் சாதனையை உடைப்பதற்கு இன்னும் 26 சதங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் ஃபார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி அதை உடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் 34 வயதை கடந்து விட்டதால் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றால் எளிதாக சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்கலாம் என்று சோயப் அக்தர் கூறியுள்ளார்.

Sachin-Kohli

குறிப்பாக அதிக எனர்ஜியை வீணடிக்கும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் அதை விராட் கோலி எளிதாக உடைக்க முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஒரு கிரிக்கெட்டராக நீங்கள் என்னிடம் கேட்டால் விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாட வேண்டும் என்று நான் சொல்வேன். ஏனெனில் டி20 ஃபார்மட் அவருடைய ஆற்றலை அதிக அளவில் வடிகட்டுகிறது. இருப்பினும் மிகவும் ஆர்வமுள்ள கேரக்டரான அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்”

- Advertisement -

“குறிப்பாக டி20 கிரிக்கெட்டை அவர் மிகவும் விரும்பி விளையாட நினைக்கிறார். ஆனால் அதே சமயம் அவர் தன்னுடைய உடலையும் சேமிக்க வேண்டும். தற்போது அவருக்கு எவ்வளவு வயதாகிறது? 34 தானே? எனவே இப்போதிலிருந்து அவரால் எளிதாக 6 – 8 வருடங்கள் வரை விளையாட முடியும். குறிப்பாக இன்னும் 30 – 50 டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் அதில் அவரால் இன்னும் 25 சதங்கள் அடிப்பதற்கு எந்த சிரமமும் இருக்காது. இருப்பினும் அந்த சாதனையை முறியடிப்பது ஃபிட்னஸ் மற்றும் மனதளவில் மிகப்பெரிய வேலையாகவே இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அவர் பஞ்சாபியை போல் மிகவும் வலுவானராக இருக்கிறார்”

Akhtar

“மேலும் தற்போது அவர் சுதந்திரமான மனநிலையுடன் இருப்பது நல்ல அறிகுறியாகும். எனவே 100 சதங்கள் சாதனையை உடைப்பதற்கு அவர் தொடர்ந்து கவனத்துடன் செயல்பட வேண்டும். அதை செய்தால் இந்தியா அவரை கொண்டாடுவதற்கு எப்போதுமே தயாராக இருக்கும்”

இதையும் படிங்க:நாங்க 2 ஆசிய கோப்பை ஜெயிச்சதை எல்லாரும் மறந்துட்டாங்க, நீங்களாச்சும் அதை செய்ங்க – டிராவிட்டுக்கு சாஸ்திரி அட்வைஸ்

“மேலும் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோரில் யார் சிறந்தவர் என்ற விவாதங்கள் குப்பை என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆசிய கண்டத்தில் விராட் கோலி அல்லது பாபர் அசாம் ஆகியோரை தவிர்த்து தற்சமயத்தில் யார் பெரிய வீரர்? யாருமில்லை. எனவே கவனத்தை ஈர்ப்பதற்காகவே அது போல் சிலர் பேசுகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement