வீடியோ : சுழலில் திணறடித்த வருண் – நரேன், சியர் லீடர்களை பதம் பார்த்து சென்னையை காப்பாற்றிய சிவம் துபே

Shivam Dube Varun Chakravarthy
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் ஏற்கனவே கொல்கத்தா கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது. அந்த நிலைமையில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் எம்எஸ் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய சென்னைக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாட முயற்சித்த ருதுராஜ் கைக்வாட் 31 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 17 (13) ரன்களில் அவுட்டாக்கிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அடுத்து வந்து அதிரடி காட்ட முயற்சித்த அஜிங்கிய ரகானேயும் 1 பவுண்டரி 1 சிக்ஸ்ருடன் அடுத்த சில ஓவர்களில் 16 (11) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

போதாகுறைக்கு மறுபுறம் தடுமாற்றமாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 3 பவுண்டரியுடன் 30 (28) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்து வந்த ராயுடு அடுத்த சில ஓவர்களில் சுனில் நரேன் சுழலில் 4 (7) ரன்களில் கிளீன் போல்டானார். அதனால் 68/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடிய சென்னைக்கு அடுத்து வந்த மொயின் அலியும் 1 (2) ரன்னில் சுனில் நரேன் சுழலில் கிளீன் போல்ட்டானதால் 100 ரன்களை தாண்டுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டது.

அந்த நிலைமையில் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாட முடியாமல் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதால் ரசிகர்கள் கடுப்பான நிலையில் மறுபுறம் மீண்டும் கில்லி போல சொல்லி அடித்த சிவம் துபே சிக்ஸர்களை அடித்து அழுத்தத்தை ஓரளவு விடுவித்தார். ஆனாலும் கூட எதிர்ப்புறம் ரவீந்திர ஜடேஜா 1 சிக்சருடன் சிங்கிள் டபுள் மட்டுமே எடுத்து 6வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடைசி வரை அதிரடியாக விளையாடாமல் 24 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னைக்கு பெரிய பின்னடைவை கொடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் வந்த தோனி வெறும் 2* (3) ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட சிவம் துபே 1 பவுண்டரி 3 சிக்சருடன் 48* (34) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய சென்னை 20 ஓவர்களில் 144/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

இந்த போட்டியில் பிட்ச் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே சுழலுக்கு சாதகமாக இருந்ததால் சென்னை பேட்ஸ்மேன்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோரது தரமான சுழலில் திணறலாக செயல்பட்டனர். இருப்பினும் இந்த சீசனில் ஆரம்பம் முதலே அதிரடியாக செயல்பட்டு வரும் சிவம் துபே மட்டும் மீண்டும் ஒருமுறை முக்கிய நேரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய அழுத்தத்தை தன்னுடைய அட்டகாசமான பேட்டிங்கால் உடைத்து சென்னை ஓரளவு காப்பாற்றினார்.

இதையும் படிங்க: வீடியோ : நெருப்பாக மாறிய ஆர்சிபி, ராஜஸ்தான் மோசமான சாதனை – முரட்டு வெற்றியால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? விவரம் இதோ

குறிப்பாக அவர் பறக்க விட்ட 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் மைதானத்தின் ஓரத்தில் கொல்கத்தா அணியின் சிறந்த செயல்பாடுகளை கொண்டாடும் வகையில் செயல்பட்ட கொல்கத்தா சியர் லீடர்ஸ் மீது பட்டது ரசிகர்களிடம் கலகலப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் பேட்டிங்கு சவாலாக இருக்கும் மைதானத்தில் சென்னை 20 – 30 ரன்களை குறைவாக எடுத்துள்ளதால் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று முனைப்புடன் போராடி வருகிறது.

Advertisement