வீடியோ : நெருப்பாக மாறிய ஆர்சிபி, ராஜஸ்தான் மோசமான சாதனை – முரட்டு வெற்றியால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? விவரம் இதோ

RR vs RCB 2
- Advertisement -

எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 60வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூrரு ஆகிய அணிகள் மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளுமே களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் உடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட விராட் கோலி 18 (19) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் உடன் இணைந்த கேப்டன் டு பிளேஸிஸ் சிறப்பாக செயல்பட்டு 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அந்த நிலைமையில் வந்த மஹிப்பால் லோம்ரர் 1, தினேஷ் கார்த்திக் 0 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்ளில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். போதாக்குறைக்கு மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட கிளன் மேக்ஸ்வெல் 5 பவுண்டரி 3 சிகாருடன் 54 (33) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்ததார்.

- Advertisement -

மாஸ் வெற்றி:
இருப்பினும் கடைசி நேரத்தில் 3 பவுண்டர் 2 சிக்சரை பறக்க விட்ட இளம் வீரர் அனுஜ் ராவத் 29* (11) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூரு 171/5 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா மற்றும் கேஎம் ஆசிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே கடந்த போட்டியில் முரட்டுத்தனமாக அடித்த ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்ற்ய நிலையில் பர்ணல் வீசிய அடுத்த ஓவரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லரும் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதனால் 6/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் 4 (5) ரன்களில் அவுட்டாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய தேவ்தூத் படிக்கல் 4 (4) ரன்களில் ஆட்டமிழந்து பெரிய பின்னடைவை கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்த சில ஓவர்களில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்த இங்கிலாந்தின் ஜோ ரூட் 10 (15) துருவ் ஜுரேல் 1 (7) என முக்கிய வீரர்கள் நிதானமாக விளையாட முடியாத அளவுக்கு பெங்களூரு பவுலர்கள் நெருப்பாக செயல்பட்டு சொற்ப ரன்களில் காலி செய்தனர்.

- Advertisement -

அதனால் 28/5 என ஆரம்பத்திலேயே மொத்தமாக சரிந்த ராஜஸ்தானை காப்பாற்ற போராடிய சிம்ரன் ஹெட்மையர் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 35 (19) ரன்களில் போராடி அவுட்டான நிலையில் அஸ்வின் 0, ஜாம்பா 2 என அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினார்கள். அதனால் 10.3 ஓவரிலேயே ராஜஸ்தானை வெறும் 59 ரன்களுக்கு சுருட்டிய பெங்களூரு 112 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மாஸ் காட்டிய அந்த அணிக்கு அதிகபட்சமாக வேன் பர்ணல் 3 விக்கெட்டுகளும் மைக்கேல் பிரெஸ்வெல் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

மறுபுறம் 59 ரன்களுக்கு சுருண்ட ராஜஸ்தான் ஐபிஎல் வரலாற்றில் 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற தங்களுக்கு மோசமான சொந்த சாதனையை சமன் செய்தது. அந்த பட்டியலில் முதலிடத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 2017இல் பெங்களூரு 49 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. 2வது இடத்தில் இதே பெங்களூருவுக்கு எதிராக ராஜஸ்தான் 2009இல் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை போல மீண்டும் ஆல் அவுட்டாகி சமன் செய்துள்ளது. அதைவிட இந்த முரட்டு வெற்றியால் 12 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு கூடுதல் ரன் ரேட்டை பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

அதனால் தங்களுடைய கடைசி 2 போட்டிகளில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலைமைக்கு பெங்களூரு வந்துள்ளது. ஆனால் 13 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்த ராஜஸ்தான் 6வது இடத்துக்கு சரிந்ததுள்ளதால் தன்னுடைய கடைசி போட்டியில் வென்றாலும் தகுதி பெறுவது 90% சந்தேகமாகியுள்ளது.

Advertisement