வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கரீபியின் பிரிமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பெஸட்ரி நகரில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற 7வது லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் நேவிஸ் பட்ரியோட்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற காயனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய கயானா அணிக்கு கெவின் சின்க்ளைர் 17, ஷாய் ஹோப் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். அவருடன் அடுத்ததாக வந்த சிம்ரோன் ஹெட்மயர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.
சிக்ஸர் மட்டும் தான்:
அந்த வகையில் மிடில் ஓவர்களில் எதிரணி பவுலர்களை பந்தாடிய இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது குர்பாஸ் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 69 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அவரை விட அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் வழக்கத்திற்கு மாறாக பவுண்டரிகளே அடிக்காமல் சிக்சர் மழை பொழிந்து அரை சதத்தை கடந்தார்.
அதே வேகத்தில் பட்டாசாக விளையாடி அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 (39) ரன்களை 233.33 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஆட்டமிழந்தார். ஆச்சரியப்படும் வகையில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத அவர் அந்த இன்னிங்ஸில் 11 சிக்சர்களை பறக்க விட்டார். இதன் வாயிலாக ஒரு டி20 போட்டியில் பவுண்டரியே அடிக்காமல் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை ஹெட்மயர் படைத்துள்ளார்.
ஹெட்மயர் உலக சாதனை:
இதற்கு முன் 2018ஆம் ஆண்டு நாட்டிங்காம்ஷைர் அணிக்காக ரிக்கி வெசல்ஸ் வோர்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக பவுண்டரி அடிக்காமல் 9 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதே போல ஒரு டி20 போட்டியில் பவுண்டரி அடிக்காமலேயே அதிகபட்ச ஸ்கோர் (91) பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையும் ஹெட்மயர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை உள்ளூர் தொடரில் போலீஸ் எஸ்சி அணிக்கு எதிராக செபாஸ்ட் அணிக்காக சஸ்ரிக்கா புசுகல்லோ 78 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
இதையும் படிங்க: சச்சின் சாதனையை ஜோ ரூட் உடைக்க ஜெய் ஷா விரும்ப மாட்டாரு.. காரணம் இது தான்.. மைக்கேல் வாகன்
இறுதியில் கீமோ பால் 38 (14) ஃரைபர் 14 (5) ரன்கள் எடுத்த உதவியுடன் கயானா 20 ஓவரில் 266-7 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து 267 ரன்களை துரத்திய செயின்ட் கிட்ஸ் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 226 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஆண்ட்ரே பிளக்சர் 81 (33) ரன்கள் எடுத்தார். மறுபுறம் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கயானாவுக்கு அதிகபட்சமாக கேப்டனின் இம்ரான் தாகிர் குடகேஷ் மோட்டி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.