இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ரன்கள் சாதனையை உடைப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஜோ ரூட் இதுவரை 145 போட்டிகளில் 12377 ரன்களும் 34 சதங்களும் குவித்து இங்கிலாந்தின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
அத்துடன் அலெஸ்டர் குக்கை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். தற்போது 33 வயதாகும் ஜோ ரூட் இன்னும் 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த 4 வருடங்களில் அவர் இன்னும் 3500 – 4000 ரன்கள் அடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஜெய் ஷா விடமாட்டாரு:
அதை செய்தாலே 15921 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார். அதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக மைக்கேல் வாகன், ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை ஜோ ரூட் உடைப்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விரும்ப மாட்டார் என்று மைக்கேல் வாகன் அதிரடியான கருத்தை கூறியுள்ளார்.
ஏனெனில் உலக சாதனைப் பட்டியலில் ஒரு இந்தியர் முதலிடத்தில் இருப்பதையே ஜெய் ஷா விரும்புவார் என்று அவர் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். அதற்காக புதிய ஐசிசி தலைவராக பொறுப்பேற்க உள்ள ஜெய் ஷா வருங்காலங்களில் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து சச்சின் சாதனையை காப்பாற்றுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
சாதனை தப்புமா:
இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் சேனலில் மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு. “அடுத்த ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சுமாராக விளையாடினாலும் அங்கிருந்து அவர் மீண்டும் அசத்துவார் என்று நினைக்கிறேன். அதன் காரணமாக சச்சின் டெண்டுல்கரை முந்தி அவர் சாதனை படைத்தால் அது டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்த சிறந்த விஷயமாக இருக்கும். ஏனெனில் உலக சாதனைப் பட்டியலில் ஒரு ஆங்கிலேய வீரர் இருப்பதை ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ விரும்ப மாட்டார்கள்”
இதையும் படிங்க: இலங்கையில் கெளதம் கம்பீர் இதைத் தான் சொன்னாரு.. வங்கதேச தொடருக்காக இதை செய்றேன்.. ஜெய்ஸ்வால் பேட்டி
“அவர்கள் ஒரு இந்தியர் மேலே இருப்பதையே விரும்புவார்கள். இருப்பினும் அதையும் தாண்டி ஜோ ரூட் முதலிடம் வந்து விட்டால் வருங்காலத்தில் அவரை மற்றொருவர் தாண்டுவது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் உலகில் மற்ற அணிகளை காட்டிலும் இங்கிலாந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதனால் சச்சின் சாதனையை ஜோ ரூட் உடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.