இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். பயிற்சியாளராக வந்ததும் சூரியகுமாரை புதிய டி20 கேப்டனாக தேர்ந்தெடுத்த அவர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்வு செய்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது. அந்த நிலையில் அவருடைய வழி காட்டுதலில் இலங்கை மண்ணில் விளையாடிய இந்தியா டி20 தொடரில் வென்றது. ஆனால் ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இலங்கைத் தொடரில் முதல் முறையாக கௌதம் கம்பீரிடம் பேசியதாக இனம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். அப்போது விளையாட்டை மிகுந்த மகிழ்ச்சியுடன் சுதந்திரமாக விளையாடுமாறு கம்பீர் தமக்கு ஆலோசனை தெரிவித்ததாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அது பயமின்றி விளையாடுவதற்கு தேவையான தன்னம்பிக்கையை தமக்கு கொடுத்ததாகவும் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
கம்பீர் ஆலோசனை:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் கௌதம் கம்பீரிடம் இலங்கைத் தொடரின் போது நான் பேசினேன். அவர் எங்களுக்கு முழுமையான ஆதரவு கொடுத்தார். களத்திற்கு சென்று கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் சுதந்திரமாக விளையாடுங்கள் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று சொன்னார். அது எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்து பயமின்றி விளையாட உதவியது” என்று கூறினார்.
மேலும் தமது ஆட்டத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு துலீப் கோப்பையில் விளையாட உள்ளதாக ஜெயஸ்வால் கூறியுள்ளார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி அடுத்ததாக நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக மீண்டும் அசத்துவேன் என்றும் ஜெய்ஸ்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.
துலீப் கோப்பை:
“துலீப் கோப்பைக்காகவும் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச தொடருக்காகவும் நான் கடினமான வலைப்பயிற்சிகளை செய்து வருகிறேன். இது தனிப்பட்ட இலக்குகளை நிர்ணயிப்பது பற்றியது கிடையாது. கிரிக்கெட்டில் நீங்கள் தொடர்ந்து அசத்துவதற்கு உங்களது திறமையில் வேலை செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். துலீப் கோப்பை, இராணி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்கள் எனக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்து சர்வதேச தொடர்களுக்கு தயாராக உதவுகிறது”
இதையும் படிங்க: துவங்கிய துலீப் கோப்பை 2024 : இஷானுக்கு பதில் கழற்றி விடப்பட்ட சஞ்சு சாம்சன்.. 4 தமிழக வீரர்களுக்கு இடம்
“அவற்றில் விளையாடி என்னுடைய இடத்திலிருந்து அணியின் வெற்றிக்கு பங்காற்ற முயற்சிக்கிறேன். அது போன்ற உள்ளூர் தொடர்களிலிருந்து உங்களால் நிறைய கற்றுக் கொள்ள முடியும். வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன்பாக துலீப் கோப்பை எங்களுக்கு நல்ல தயாராக உதவும் இடமாக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வங்கதேச டெஸ்ட் தொடர் சென்னையில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.