
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார். 2010ஆம் ஆண்டு அறிமுகமான அவர் மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்தார். அவரது திறமையை உணர்ந்த தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மாவுடன் களமிறங்கும் துவக்க வீரராக அறிமுகப்படுத்தினார். அதைப் பயன்படுத்தி அதிக ரன்கள் குவித்த தவான் தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
2015 உலகக் கோப்பையிலும் இந்தியாவுக்காக டாப் ரன்கள் விளாசிய அவர் 2017 சாம்பியன்ஸ் மீண்டும் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருதை வென்றார். 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதத்தை அடித்த தவான் காயமடைந்து வெளியேறினார். அதிலிருந்து குணமடைந்து வந்த அவரால் முன்பு போல் தொடர்ச்சியாக அதிரடியாக பெரிய ரன்கள் குவிக்க முடியவில்லை.
மறுபுறம் அவருக்கு போட்டியாக கேஎல் ராகுல், இசான் கிசான், சுப்மன் கில் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அவதரித்தனர். அதனால் 2022க்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்ட அவர் கடந்த வருடம் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் 2022 வங்கதேச ஒருநாள் தொடரில் இஷான் கிசான் இரட்டை சதமடித்த போதே தம்முடைய இந்திய கேரியர் முடிந்தது என்பதை உணர்ந்ததாக தவான் கூறியுள்ளார்.
இது பற்றி தம்முடைய சுயசரிதை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இதை மற்றொரு கோணத்திலும் பார்க்க வேண்டும். சுப்மன் கில் டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தியதால் எனக்கு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மற்ற வீரர்கள் பயிற்சியாளர்கள் முன்னிலையில் சிறப்பாக விளையாடி சொந்தமாக ஒளியை உருவாக்கினார்கள்”
“நானும் 50, 70+ போன்ற ரன்களை நிறைய அடித்தேன். ஆனால் சதத்தை அடிக்கவில்லை. இஷான் கிசான் 200 ரன்கள் அடித்த போது “சரி பையனே, உன்னுடைய கேரியர் முடியப்போகிறது” என்று என்னுடைய உள்ளுணர்வு சொன்னது. அந்த சமயங்களில் என்னுடைய நண்பர்கள் எனக்கு உணர்வுபூர்வமாக ஆதரவு கொடுத்தனர். அணியில் என்னுடைய இடத்தை இழந்த போது எந்த இந்திய வீரர்களும் மெசேஜ் செய்யவில்லை”
இதையும் படிங்க: 31/3 டூ 181/4.. சரிந்து எழுச்சி கண்ட இந்திய மகளிரணி.. பிரிஸ்டோலில் இங்கிலாந்துக்கு எதிராக 2 வரலாற்று சாதனை வெற்றி
“ராகுல் டிராவிட் பாய் மெசேஜ் செய்தார். இங்கே விளையாடும் அனைத்து வீரர்களும் தங்களுடைய சொந்த வழியில் சொந்த பயணத்தில் இருக்கிறார்கள். 14 வயது முதலே நான் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன். எனவே அணியிலிருந்து நீக்கப்படுவது எனக்கு புதிது கிடையாது” என்று கூறினார். மேலும் தமது புத்தகத்தை படிக்கும் போது உங்களது முகத்தில் புன்னகை வரும் என்பதால் அதை வாங்கி படிக்குமாறு ரசிகர்களுக்கு தவான் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.