31/3 டூ 181/4.. சரிந்து எழுச்சி கண்ட இந்திய மகளிரணி.. பிரிஸ்டோலில் இங்கிலாந்துக்கு எதிராக 2 வரலாற்று சாதனை வெற்றி

Ind vs eng womens 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிரணி அங்கு முதலாவதாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் ஸ்மிரிதி மந்தனா சதத்தின் உதவியுடன் 97 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி ஜூலை ஒன்றாம் தேதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு பிரிஸ்டோல் நகரில் உள்ள கவுன்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 13, ஷபாலி வர்மா 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அடுத்ததாக வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் 1 ரன்னில் அவுட்டானதால் 31/3 என ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறியது.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

அப்போது ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் அமன்ஜோத் கௌர் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள். 6வது ஓவரில் சேர்ந்த அந்த ஜோடி 15 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடி 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தியது. அதில் ஜெமிமா அரை சதத்தை அடித்து 63 (41) ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

ஆனால் மறுபடியும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய அமன்ஜோத் அரை சதத்தை அடித்து 63* (40) ரன்கள் குவித்து அசத்தினர். இறுதியில் ரிச்சா கோஸ் அதிரடியாக 32* (20) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் இந்தியா 20 ஓவரில் 181/4 ரன்களை எடுத்து அசத்தியது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக லாரன் பெல் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

சாதனை வெற்றி:

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்துக்கு சோபியா டுங்லி 1, டேனியல் வைட் 1, கேப்டன் நட் ஸ்கீவர் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய டம்மி பியூமோண்ட் போராடி 54 (35) ரன்கள் எடுத்தார். அதே போல எமி ஜோன்ஸ் நிதானமாக விளையாடி 32 (27) ரன்கள் எடுத்தார். ஆனால் லோயர் ஆர்டரில் அலிஸ் கேப்சி 5, எம் அர்லட் 12* ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

அதனால் சோபி எக்லெஸ்டென் 35 (23) ரன்கள் எடுத்தும் இங்கிலாந்தை 157/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் வாயிலாக மகளிர் டி20 கிரிக்கெட்டின் வரலாற்றில் பிரிஸ்டோல் மைதானத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதையும் படிங்க: இனிமேல் அவங்கள நம்ப வேண்டாம்.. நாமளே இந்தியாவை தாங்கி பிடிப்போம்.. சக வீரர்களுக்கு கில் கோரிக்கை

இதற்கு முன் இம்மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளிலும் இங்கிலாந்து வென்றுள்ளது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் டி20 தொடரில் இங்கிலாந்து அணியை அடுத்தடுத்த போட்டிகளில் தோற்கடித்த முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் விளையாடிய 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒருமுறை கூட இங்கிலாந்து அடுத்தடுத்த போட்டிகளில் தோற்றதில்லை.

Advertisement