கிரிக்கெட்டில் மும்பையின் அம்பானிக்கே சவால் விடும் கொல்கத்தாவின் ஷாருக்கான் – முழுவிவரம் இதோ

Sharukh-khan
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் மும்பை நகரில் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் கோலாகலமாக ஒரு மாதத்தை கடந்து இறுதிகட்டத்தை நோக்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக தொடங்கப்பட்ட இந்த தொடர் ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு தரத்திலும் பணத்திலும் பன்மடங்கு உயர்ந்து இன்று உலகின் நம்பர்-1 டி20 தொடராக ஜொலிக்கிறது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளின் முடிவுகள் கடைசி ஓவரில் தீர்மானிக்கப்படுவதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர்களை விட தரத்தில் தனக்கென ஒரு உயரத்தை ஐபிஎல் தொட்டுள்ளது.

MI Jaspirt Bumrah

- Advertisement -

அதேபோல் ஒவ்வொரு வருடமும் பல 1000 கோடிகளை வருமானமாக கொட்டி கொடுக்கும் இந்த தொடரால் ஐசிசியை விட பிசிசிஐ பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. இதனால் பெரும் முதலீட்டாளர்கள் இத்தொடரில் ஐபிஎல் அணிகளை வாங்க முயற்சித்ததால் இந்த வருடம் லக்னோ 7000+ கோடி குஜராத் 5000+ கோடி ஆகிய புதிய 2 அணிகள் வாயைப்பிளக்க வைக்கும் ப்ரம்மாண்ட தொகைகளில் உருவாக்கப்பட்டு 10 அணிகள் பங்கேற்கும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக நடைபெற்று வருகிறது.

மும்பையும் அம்பானியும்:
இப்படி பண மழையைக் கொட்டிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் சென்னை உட்பட இதர அணிகளை காட்டிலும் அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்ட அணியாக முதலிடம் பிடித்துள்ளது. அதனால் அதனுடைய மதிப்பும் 1 பில்லியன் டாலரை கடந்துள்ளதாக சமீபத்திய ஃபோர்ப்ஸ் நாளிதழில் செய்திகள் வெளியானது. அந்த வகையில் ஏற்கனவே இந்தியாவின் பணக்காரராக கருதப்படும் அம்பானி மும்பை அணியின் வாயிலாக இதர ஐபிஎல் அணிகளுக்கு சவால் விடக்கூடியவராக திகழ்கிறார்.

Nita Ambani MI

ஆனால் கிரிக்கெட்டில் உலக அளவில் அம்பானிக்கு சவால் விடும் வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முன்னேறியுள்ளார். அதாவது ஐபிஎல் தொடரை பார்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் டி20 தொடர்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு நாடுகளான துபாயில் புதிதாக ஒரு டி20 தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் அபுதாபி நகரை மையமாகக் கொண்ட அணியை சாருக்கான் தலைமையிலான நைட் ரைடர்ஸ் குழுமம் வாங்கியுள்ளது.

- Advertisement -

கிங் சாருக்கான்:
இது அந்த தொடரில் உருவாக்கப்படும் 6-வது அணியாகும். ஏற்கனவே விற்கப்பட்ட முதல் 5 அணிகளை மும்பை இந்தியன்ஸ் அம்பானி குழுமம், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் குழுமம், அதானி குழுமம், காப்ரி குழுமம், லன்செர் கேப்பிடல் குழுமம் ஆகிய 5 குழுமங்கள் வாங்கியுள்ளன. அந்த வகையில் இந்த தொடரில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானி மும்பை இந்தியன்ஸ் அணியை தொடர்ந்து 2-வதாக ஒரு டி20 அணியை வாங்கியுள்ளார். ஆனால் ஷாருக்கான் வாங்குவது இது 4-வது டி20 அணியாகும்.

ஆம் அவர் ஏற்கனவே ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், மேஜர் கிரிக்கெட் லீக் ஆகிய 3 தொடர்களில் தலா 1 அணிகளை வாங்கியுள்ளார். தற்போது துபாயில் 4-வதாக வாங்கியுள்ள இந்த அணியின் பெயர் அபுதாபி நைட் ரைடர்ஸ் என்று வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவரும் அவருடன் பார்ட்னர்ஷிப் செய்துள்ள மற்றொரு பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரின் கணவர் ஆகியோர் அடங்கிய நைட் ரைடர்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த பல வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் நைட் ரைடர்ஸ் பிராண்டை அதிகரித்துவரும் நாங்கள் தற்போது துபாய் டி20 தொடரிலும் கால்தடம் பதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தவித சந்தேகமும் இன்றி இது மிகப்பெரிய வெற்றி அடையும் என்று உறுதியாக நம்புகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

sharukh 1

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக டி20 தொடர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டி20 தொடர் இந்த வருடத்தின் இறுதியில் 6 அணிகள் பங்குபெறும் தொடராக நடைபெற உள்ளது. இதில் லீக் சுற்று நாக்-அவுட் சுற்று உட்பட மொத்தம் 34 போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : என்னுடைய உலகசாதனையை அவர் உடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே – சோயப் அக்தர் வெளிப்படை பேச்சு

வரும் காலங்களில் இந்த அணிகளின் அதிகாரப்பூர்வ பெயர்களும் அதில் பங்கேற்கும் வீரர்கள் எந்த அடிப்படையில் வாங்கப்படுவார்கள் என்ற விவரங்களும் அட்டவணைகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement