நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. ஏனெனில் கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போன்ற முக்கிய நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுகின்றனர்.
மறுபுறம் இத்தொடரில் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட பாபர் அசாம் தலைமையில் முழு பலத்துடன் கூடிய பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. அந்த சூழ்நிலையில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் பாகிஸ்தான் வென்றது. ஆனால் 3வது போட்டியில் வலுவான பாகிஸ்தானை தோற்கடித்த நியூசிலாந்து 1 – 1 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.
கலாய்க்கும் ரசிகர்கள்:
முன்னதாக இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் 45* ரன்கள் அடித்த முகமது ரிஸ்வான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேகமாக 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற பாபர் அசாம், விராட் கோலியின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் விராட் கோலி, மற்றும் பாபர் அசாம் தலா 81 ஒரு இன்னிங்ஸில் 3000 ரன்கள் அடித்திருந்தனர். தற்போது முகமது ரிஸ்வான் 79 இன்னிங்ஸ் 3000 ரன்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில் முகமது ரிஸ்வான் டி20 கிரிக்கெட்டின் டான் பிராட்மேன் என்று நட்சத்திர பாகிஸ்தான் வீரர் சாகின் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டின் ப்ராட்மேன் மற்றும் பாகிஸ்தானின் சூப்பர்மேன் முகமது ரிஸ்வான் 3000 ரன்களை கடந்ததற்காக வாழ்த்துக்கள். உங்களுடைய தாக்கம் விளையாட்டை மாற்றி உங்களை சந்தேகித்தவர்களை அமைதிப்படுத்தியுள்ளது”
“இப்படியே தொடருங்கள் சாம்பியன். நீங்கள் பலருக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார். ஆனால் அதைப் பார்த்த ரசிகர்கள் தன்னுடைய மொத்த டி20 கேரியரில் வெறும் 6 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ள ரிஸ்வான் உண்மையாகவே ப்ராட்மேன் தான் என்று கலாய்த்து வருகின்றனர். அத்துடன் அந்த 3000 ரன்களை முகமத் ரிஸ்வான் 2349 பந்துகளில் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இதான் சிஎஸ்கே மனசு.. காயத்தால் நாடு திரும்பாமல் சென்னைக்கு வந்த டேவோன் கான்வே.. காரணம் என்ன
எனவே பந்துகள் அடிப்படையில் வேகமாக 3000 ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி, மார்ட்டின் கப்டில், பால் ஸ்டெர்லிங், பாபர் அசாம் ஆகியோருக்கு பின் 8வது இடத்தில் தான் முகமது ரிஸ்வான் உள்ளார். அதனால் பாராட்டுவதாக இருந்தாலும் கொஞ்சம் மனசாட்சியுடன் பேசுங்கள் என்று ஷாஹீன் அப்ரிடிக்கு ரசிகர்கள் இந்த புள்ளி விவரங்களை ஆதாரங்களாக கொடுத்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.