
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கு முன் தெனாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்காக ரிசப் பண்ட் தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்தியா ஏ அணியில் சர்பராஸ் கான் கழற்றி விடப்பட்டது பலரையும் ஏமாற்றமடைய வைத்தது.
ஏனெனில் மும்பையை சேர்ந்த அவர் போராடி கடந்த 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அத்தொடரில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த சர்பராஸ் கான் அடுத்து நடைபெற்ற நியூசிலாந்து தொடரின் முதல் போட்டியில் 150 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் எஞ்சிய போட்டிகளில் பெரிய ரன்கள் அடிக்கத் தவறியதால் அவருக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதற்கிடையே காயமடைந்த அவருக்கு கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தற்போது குணமடைந்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடத் துவங்கியுள்ள சர்பராஸ் தென்னாபிரிக்க தொடரில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் கடைசியில் பார்த்தால் அவருக்கு தென்னாபிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடரிலேயே வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனால் தென்னாப்பிரிக்கா தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே நம்பப்படுகிறது. அதன் காரணமாக சர்பராஸ் கான் கேரியர் கேள்விக்குறியாகியுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியா ஏ அணிக்காக தேர்ந்தெடுக்கப்படாததால் சர்பராஸ் கானுடையை கேரியர் முடிந்து விடாது என்று மும்பை கேப்டன் சர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.
ரஞ்சிக் கோப்பையில் நிறைய ரன்கள் குவித்து அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று தெரிவிக்கும் தாக்கூர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இப்போதெல்லாம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகும் இடமாக அவர்கள் இந்தியா ஏ அணியை கருதுகின்றனர். அதற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட சர்பராஸ் இந்தியா ஏ அணிக்காக விளையாட வேண்டும் என்ற அவசியமில்லை”
இதையும் படிங்க: பாதி ஆஸிக்கு யார்னே தெரியாத குல்தீப்பை.. இனியும் எடுக்கலன்னா நீங்க புத்திசாலி இல்ல.. அஸ்வின் சாடல்
“ஒருவேளை அவர் மீண்டும் ரன்கள் அடித்தால் நேரடியாக இந்திய அணிக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடுவார். காயத்திலிருந்து வந்த பின் புஜ்ஜி பாபு தொடரில் 2 சதங்கள் அடித்த அவர் மீண்டும் காயமடைந்தார். பின்னர் ரஞ்சியில் 40 (42) ரன்கள் அடித்த அவர் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். அவருக்கு இந்தியா ஏ அணிக்காக விளையாடுவது முக்கியமல்ல. அவர் ஏற்கனவே 200 – 250 ரன்களை அடித்துள்ளார். அழுத்தத்தைத் தாங்கி அவ்வளவு பெரிய ரன்கள் அடிக்க உங்களிடம் ஸ்பெஷல் திறமை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஸ்பெஷல் வீரர்களில் ஒருவரான அவர் ஏமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்த மாட்டார்” என்று கூறினார்.