
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. சூரியகுமார் தலைமையிலான அந்த அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டு ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது நிறைய விமர்சனங்களை உண்டாக்கியது. குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் கடந்த சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனல் அழைத்து சென்றார்.
604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கிய அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அப்படி நல்ல ஃபார்மில் இருக்கும் அவருக்கு ஆசிய கோப்பையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. அதனால் ஏராளமான ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தேர்வுக் குழுவை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆசியக் கோப்பையில் தேர்வாக தகுதியானவர் என்று இந்திய வீரர் சர்துள் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆனால் அதைப் பற்றி பேசினால் தமக்கு வாய்ப்பளிக்காமல் தேர்வுக் குழுவினர் தம்முடைய கேரியரை முடித்து விடுவார்கள் என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார். இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் அதற்காக பின்வாங்காமல் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி தாக்கூர் பேசியது பின்வருமாறு. “அதைப் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் அது தேர்வாளர்கள் மற்றும் வாரியத்தின் முடிவாகும். எனவே நம்மால் அது பற்றி எதுவும் சொல்ல முடியாது. குறிப்பாக என்னால் அது பற்றி எதுவும் பேச முடியாது. ஏனெனில் அது என்னுடைய கையில் இல்லை. அது பற்றி நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன”
“அது போன்ற சூழ்நிலைகளில் ஒரு வீரராக நீங்கள் வலுவாக இருக்க வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயரும் வலுவானவர். அடுத்தப் போட்டிகளில் விளையாடும் போது அவர் சிறப்பாக விளையாடி அசத்துவார் என்று நான் உறுதியாக சொல்வேன்” எனக் கூறினார். இதை அடுத்து செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஆசிய கோப்பை ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது.
இதையும் படிங்க: கடவுள் எனக்கு அந்த ஆன்மீக சக்திய கொடுத்துருக்காரு.. இந்திய மக்களுக்காகவே அதை தாங்கிகிட்டேன்.. புஜாரா பேட்டி
அந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு சுப்மன் கில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாட உள்ளார். அந்த வகையில் சுப்மன் கில்லை வருங்கால கேப்டனாக உருவாக்குவதற்காக தேர்வுக்குழுவினர் ஸ்ரேயாஸ், சாம்சன் ஆகிய இருவருடைய வாய்ப்பைப் பறித்துள்ளார்கள். அதைத் தாண்டி அவ்விருவரும் மேற்கொண்டு விளையாடி சாதிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.