
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரம எதிரிகளாக பாவிக்கப்படுகின்றன. ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை சாதாரண விளையாட்டாக கருதாமல் கௌரவமாக கருதி விளையாடுவார்கள். அதனால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மோதுவதால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளில் அனல் பறப்பதே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் ஸ்பெஷலான அம்சமாகும்.
அப்படிப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அடுத்ததாக ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் மோதுகின்றன. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் மோதல் பற்றிய ஆவணப் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முழுமையாக வெளியாகும் அந்தப் படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த முன்னோட்டத்தில் முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி 1996, 1997, 1998 ஆகிய வருடங்களில் கனடாவில் நடைபெற்ற பிரண்ட்ஷிப் கோப்பை பற்றி நினைவுக் கூர்ந்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்தச் சுற்றுப்பயணத்தில் பிரண்ட்ஷிப் என்பது வெறும் பெயரில் மட்டும் தான் இருக்கும். ஏனெனில் சோயத் அக்தர் 150 கிலோமீட்டர் வேகத்தில் பவுலிங் செய்வார். அப்படி செய்யும் போது நட்பு எங்கே இருக்கும்?” என்று கலகலப்பாக கூறினார்.
அதைப் பார்த்த சோயப் அக்தர் இந்திய கிரிக்கெட் நீங்கள் இல்லாமல் முழுமையாக இருக்காது என்று பதிலளித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் எழுதியுள்ளது பின்வருமாறு. “தாதா கங்குலி நீங்கள் அற்புதமானவர். இந்திய கிரிக்கெட் நீங்கள் இல்லாமல் முழுமை பெறாது” என்று பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இது போக சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் ஆகியோரும் அந்த ஆவணப் படத்தின் முன்னோட்டத்தில் பேசியுள்ளார்கள். உண்மையில் பரம எதிரிகளாக இருந்தாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் நண்பர்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக விராட் கோலி 2019க்குப்பின் சதம் அடிக்காமல் தவித்த போது பாபர் அசாம் “இதுவும் கடந்து போகும்” என்று பதிவிட்டு ஆதரவை தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறந்த ஃபேப் 4 பட்டியலில் இருந்து.. விராட் கோலியை குறிப்பிடாமல் விட்ட பாண்டிங்.. கருத்தால் ரசிகர்கள் ஏமாற்றம்
2023 ஆசிய கோப்பையில் புதிதாக பிறந்த குழந்தைக்காக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி ஸ்பெஷல் பரிசைக் கொடுத்தார். அப்படி அவ்விரு நாட்டு வீரர்கள் களத்திலும் களத்திற்கு வெளியேயும் பெரும்பாலும் நட்பாகவே இருக்கிறார்கள். இருப்பினும் எல்லைப் பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு தொடர்கள் தான் நின்று போயுள்ளது குறிப்பிடத்தக்கது.