
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். தனித்துவமான பவுலிங் ஆக்சன் வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து இந்தியா வெல்ல உதவினார். அதே போல நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் அசத்தி வருகிறார்.
குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவை கேப்டனாக வெற்றி பெற வைத்தார். 2வது போட்டியிலும் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இருப்பினும் அத்தொடரின் இரண்டாவது போட்டியில் பும்ரா லேசான காயத்தை சந்தித்தார்.
அதன் காரணமாக 2வது இன்னிங்ஸில் மிகவும் மெதுவாக பந்து வீசிய அவரது காயம் பெரியளவில் ஏற்படவில்லை. அதனால் 3வது போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா களமிறங்கியுள்ளார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் அசத்த முடியாது என்று மீண்டும் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
எனவே அவரிடத்தில் தாமாக இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று டி20, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவேன் என்று அக்தர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த வேப்பந்து வீச்சாளர். ஏனெனில் அவர் லென்த்தை புரிந்து வைத்துள்ளார். பவர் பிளேவில் அந்த இருபுருமும் ஸ்விங் செய்யக்கூடிய அவர் டெத் ஓவர்களில் அசத்தக்கூடியவர்”
“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் நீண்ட நேரம் பந்து வீச வேண்டும். அங்கே உங்களிடம் வேகம் இல்லையெனில் பேட்ஸ்மேன் உங்களை அடிப்பார்கள். லென்த் முக்கியமற்றதாக மாறிவிடும். பந்து ஸ்விங் அல்லது சீம் ஆகவில்லை என்றால் நீங்கள் தடுமாறுவீர்கள். அப்போது உங்கள் மீது கேள்விகள் எழும். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்பினால் பும்ரா தனது வேகத்தை அதிகரிக்க வேண்டும்”
இதையும் படிங்க: 3 ஆவது டெஸ்ட் அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டது ஏன்? ரோஹித்தின் திட்டம் என்ன? – விவரம் இதோ
“ஆனால் அதை செய்தால் அவர் காயத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே நான் அவராக இருந்தால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுடன் நிற்பேன். அந்த முடிவு அவரைப் பொறுத்தது. ஒருவேளை அவர் நன்றாக உணர்ந்தால் முதுகை வளைத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டை எடுக்க முடியும். ஆனால் முதலில் அவர் தன்னை பார்க்க வேண்டும். ஏனெனில் அவர் ஐபிஎல் முதல் டெஸ்ட் வரை அனைத்திலும் விளையாட விரும்புகிறார். உலக கிரிக்கெட்டுக்கு சிறந்த சொத்தாக வந்துள்ள அவரை நாம் வீணடித்து விடக்கூடாது” என்று கூறினார்.