
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் டாப் 8 அணிகள் கோப்பையை வெல்வதற்காக களமிறங்க உள்ளன. அந்த அணிகளுக்கு சவாலைக் கொடுத்து நடப்புச் சாம்பியனாக பாகிஸ்தான் சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதற்கு தயாராகி வருகிறது.
குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் கோப்பையை வென்று அசத்தியது. அதே போல இம்முறையும் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே அந்த அணி ரசிகர்களின் விருப்பமாகும். மறுபுறம் எல்லைப் பிரச்சனைகளால் பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாய் மண்ணில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இம்முறை சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று நம்புவதாக முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். மேலும் செமி ஃபைனலுக்கு பாகிஸ்தான், இந்தியா மற்றும் சிறப்பாக விளையாடினால் ஆப்கானிஸ்தான் வரும் என்றும் அவர் கணித்துள்ளார். அத்துடன் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடுவதை விரும்புவதாகவும் அக்தர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து போன்ற வெளிநாட்டு அணிகளை செமி ஃபைனலில் கணிக்காத அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி இந்தத் தொடரில் முதிர்ச்சித் தன்மையை காட்டினால் அவர்கள் செமி ஃபைனலுக்கு வரக்கூடும். 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் செமி ஃபைனலுக்கு வரும் என்று நான் நம்புகிறேன்”
“அதே போல பிப்ரவரி 23ஆம் தேதி இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று நம்புகிறேன். சொல்லப்போனால் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் ஃபைனலில் மீண்டும் சந்திக்கும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார். அந்த வகையில் 2017 போல இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அக்தரின் விருப்பமாகவும் இருக்கிறது.
இதையும் படிங்க: இந்திய அணி இப்படி தடுமாற ரோஹித்தே காரணம்.. கொண்டாடிய ரசிகர்கள் விமர்சிக்க தான் செய்வாங்க.. கபில் தேவ்
மறுபுறம் 2017 தோல்விக்கு பதிலடி கொடுத்து முறை பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் இந்திய ரசிகர்களின் விருப்பமாகும். சொல்லப்போனால் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 டி20 உலகக் கோப்பை தவிர்த்து சமீப காலங்களில் பாகிஸ்தான் அணியை இந்தியா பெரும்பாலான போட்டிகளில் தோற்கடித்துள்ளது. எனவே இம்முறை சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்திய அணி வெல்லும் என்று இங்குள்ள ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.