இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்று சாதனை படைத்தது. ஆனால் அதன் பின் இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 27 வருடங்கள் கழித்து தோற்ற இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அப்படியே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது.
அதனால் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.
ரோஹித்தின் ஃபார்ம்:
குறிப்பாக முன்னின்று வழி நடத்த வேண்டிய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் சுமாராக விளையாடி இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இந்திய அணியை இப்படி தடுமாறுவதற்கு கேப்டன் ரோஹித் சர்மா தான் காரணம் என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா பெரிய வீரர். அவர் மீண்டும் ஃபார்முக்கு வேகமாக வருவார் என்று நம்புகிறேன்”
“பயிற்சியாளருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். வெற்றிப்பாதையில் செட்டில் ஆவதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும். இந்த மொத்த நாடும் நமது அணியின் சிறந்த செயல்பாடுகளை நோக்கி காத்திருக்கிறது. சமீப காலங்களில் சில நேரங்களில் நமது அணி நன்றாக விளையாடியது. ஆனால் தற்போது அணி செட்டிலாக இருப்பது போல் தெரியவில்லை”
பும்ராவின் காயம் வேற:
“கேப்டன் நல்ல ஃபார்மில் இல்லையென்றால் அணியில் பிரச்சனை இருக்கும். அணி நன்றாக விளையாடாததால் ரசிகர்களிடம் கோபம் இருக்கிறது. டி20 உலகக் கோப்பை வென்று நாடு திரும்பிய போது ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் போல் எனது வாழ்வில் பார்த்ததில்லை. எனவே மோசமாக விளையாடும் போது அவர்கள் விமர்சனத்தையும் கொடுப்பார்கள். அதனாலேயே வீரர்களை அதிகமாக பாராட்டாதீர்கள். அதை அவர்களால் கையாள முடியாது என்று சொல்வேன்”
இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து 2வது ஒன்டே கட்டாக் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“கொண்டாடும் ரசிகர்கள் சாட்டையால் அடிப்பது போல் விமர்சிப்பார்கள் என்பதே என்னுடைய கருத்து. ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற பவுலர் இந்திய அணியில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியதை நான் பார்த்ததில்லை. பும்ரா, கும்ப்ளே போன்ற பெரிய வீரர்கள் காயத்தைச் சந்தித்தால் அது அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே விரைவில் அவர் குணமடைவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.



