இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இந்திய அணி முயற்சிக்க உள்ளது.
மறுபுறம் டி20 தொடரிலேயே தோற்ற இங்கிலாந்து இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இரண்டாவது போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் இருக்கும் பரபதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
கட்டாக் மைதானம்:
1958ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 45000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 1982 முதல் சர்வதேச போட்டிகளை நடைபெற்று வருகிறது. வரலாற்றில் இங்கு நடைபெற்றுள்ள 19 போட்டிகளில் இந்தியா 17 முறை விளையாடி உள்ளது. அந்த 17 போட்டிகளில் 13 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா 4 தோல்விகளை சந்தித்துள்ளது. இங்கே 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவும் இங்கிலாந்தும் சரிசமமாக தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன.
வெதர் ரிப்போர்ட்:
கட்டாக் நகரில் இந்தப் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவிக்கின்றது. எனவே இந்தப் போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
கட்டாக் பிட்ச் வரலாற்றில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்து வருகிறது. கடைசியாக இங்கே 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோனி – யுவ்ராஜ் சிங் சதத்தின் உதவியுடன் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய இந்தியா 381 ரன்கள் குவித்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தும் 366 ரன்கள் குவித்து சவாலைக் கொடுத்தது. அந்த வகையில் சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம்.
இதையும் படிங்க: இந்தியாவை மண்ணை கவ்வ வெச்சு.. இதை செஞ்சு 24 கோடி இதயங்களை வெல்லுங்கள்.. பாகிஸ்தான் பிரதமர் பேச்சு
அதே போல ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். துல்லியமாக பவுலிங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை எடுப்பார்கள். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 229. இங்கு நடைபெற்ற 19 போட்டிகளில் 7 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 12 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் இரவு நேரத்தில் பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முதலிலேயே பவுலிங் செய்து நன்றாக செயல்படுவது வெற்றியை கொடுக்கலாம்.



