3 கேட்ச் ட்ராப்.. 1 பந்தில் 15 ரன்ஸ்.. சோகமான வினோத சாதனை படைத்த காபா ஹீரோ சமர் ஜோசப்

Shamar Joseph IPL
- Advertisement -

ஐபிஎல் 2024 20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற 28வது லீக் போட்டியில் லக்னோவை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சுமாராக விளையாடி 20 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 45, கேப்டன் கே.எல் ராகுல் 39 ரன்கள் எடுத்தனர்.

அதை சேசிங் செய்த கொல்கத்தாவுக்கு பில் சால்ட் அதிரடியாக 89* (47) ரன்கள் எடுத்து 15.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தார். முன்னதாக இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்யைச் சேர்ந்த 24 வயதாகும் இளம் வீரர் சமர் ஜோசப் லக்னோ அணிக்காக அறிமுகமாக களமிறங்கினார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் புகழ்பெற்ற காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

தடுமாறிய காபா ஹீரோ:
அதிலும் குறிப்பாக காலில் காயத்தை சந்தித்தும் மனம் தளராமல் விளையாடிய அவர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதனாலேயே இந்த ஐபிஎல் தொடரில் லக்னோவுக்காக வாங்கப்பட்ட அவர் இப்போட்டியில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஆரம்பத்திலேயே 150 கி.மீ வேகப்பந்துகளை வீசிய அவர் நல்ல துவக்கத்தை பெற்றார்.

குறிப்பாக சுனில் நரேனுக்கு எதிராக தன்னுடைய முதல் ஓவரின் முதல் 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். ஆனால் 6வது பந்தில் நோபால் போட்ட அவர் அதற்காக மீண்டும் வீசிய ஃபிரீ ஹிட்டில் பந்தில் அவர் ஒயிட் போட்டார். அதனால் மீண்டும் அவர் வீசிய பந்து துரதிஷ்டவசமாக ஒய்டாக பவுண்டரி சென்றது. அதற்காக மறுபடியும் பந்து வீசிய அவர் மீண்டும் நோபால் போட்டார்.

- Advertisement -

இறுதியில் ஒரு வழியாக சரியாக வீசிய அவர் 6வது பந்தில் சிக்ஸர் கொடுத்தார். அந்த வகையில் 6வது பந்தில் மட்டும் 15 ரன்கள் கொடுத்த அவர் மொத்தமாக முதல் ஓவரில் 10 பந்துகளை வீசினார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியின் முதல் ஓவரிலேயே 10 பந்துகளை வீசிய முதல் பவுலர் என்ற வினோதமான பரிதாப சாதனையை சமர் ஜோசப் படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 2வது மிகப்பெரிய ஓவரை வீசிய பவுலராகவும் அவர் மற்றுமொரு சோகமான சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 89 ரன்ஸ் விளாசி 2வது முறையாக துண்டை இறக்கிய சால்ட்.. லக்னோவுக்கு எதிராக கொல்கத்தா சாதனை வெற்றி

இதற்கு முன் 2023 சீசனில் பெங்களூருவின் முகமது சிராஜ் மற்றும் சென்னையின் துஷார் தேஷ்பாண்டே தலா 11 பந்துகளை வீசி ஐபிஎல் வரலாற்றின் பெரிய ஓவரை வீசிய பவுலராக மோசமான சாதனை படைத்தனர். போதாக்குறைக்கு லக்னோ ஃபீல்டர்கள் 3 கேட்ச்சை கோட்டை விட்டதால் நான்கு ஓவரில் 47 ரன்கள் கொடுத்த சமர் ஜோசப்புக்கு அறிமுகப் போட்டி சுமாராகவே அமைந்தது.

Advertisement