89 ரன்ஸ் விளாசி 2வது முறையாக துண்டை இறக்கிய சால்ட்.. லக்னோவுக்கு எதிராக கொல்கத்தா சாதனை வெற்றி

KKR vs LSg
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 28வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு குவிண்டன் டீ காக் ஆரம்பத்திலேயே 10 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த தீபக் ஹூடா 8 (10) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 39/2 என தடுமாறிய லக்னோவுக்கு மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் கேஎல் ராகுலும் 39 ரன்களில் ரசல் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

சாதனை வெற்றி:
அதே போல மிடில் ஆர்டரில் ஆயுஸ் படோனி 29 (27), மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 (5) ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நிக்கோலஸ் பூரான் 45 (32) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் லக்னோ 161/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அதைத்தொடர்ந்து 162 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு பில் சால்ட் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் சுனில் நரேனை 6 ரன்களில் காலி செய்த மோசின் கான் அடுத்ததாக வந்த அங்கிரிஸ் ரகுவன்சியையும் 7 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார். ஆனாலும் இந்த பக்கம் அதிரடியாக விளையாடிய பில் சால்ட் அரை சதமடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

- Advertisement -

அவருக்கு அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி 38* (38) ரன்கள் அடித்து கை கொடுத்தார். அதை பயன்படுத்திய பில் சால்ட் கடைசி வரை அவுட்டாகாமல் 14 பவுண்டரி 3 சிக்சருடன் 89* (47) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதனால் 15.4 ஓவரிலேயே 162/2 ரன்கள் எடுத்த கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. இதன் வாயிலாக லக்னோவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து கொல்கத்தா சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: ரெக்கார்ட் மோசமா இருந்தாலும்.. சிஎஸ்கே’வை பும்ரா தெறிக்க விடுவாரு.. காரணம் இது தான்.. லாரா கருத்து

இதற்கு முன் 2022இல் தோற்றுவிக்கப்பட்ட லக்னோவுக்கு எதிராக 3 போட்டிகளில் சந்தித்த தோல்விகளை இப்போட்டியில் உடைத்துள்ள கொல்கத்தா இந்த சீசனில் தங்களுடைய 5வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தியுள்ளது. மறுபுறம் டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியை தொடர்ந்து இந்த போட்டியிலும் தங்களுடைய கேரியரில் 2வது முறையாக 160 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

Advertisement