ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஒன்றாம் தேதி நடைபெற்ற 49வது லீக் போட்டிகள் நடப்பு சாம்பியன் சென்னையை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை மிகவும் போராடி 20 ஓவரில் 162/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62, ரஹானே 29 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹர், ஹர்ப்ரீத் ப்ரார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 163 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 46, ரிலீ ரோசவ் 43, சாம் கரண் 26* ரன்கள் அடித்து 17.5 ஓவரிலேயே மிகவும் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 10 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
வேற மாதிரியான திட்டம்:
மறுபுறம் பேட்டிங்கில் போதுமான ரன்கள் எடுக்கத் தவறிய சென்னை 10 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான பயணத்தில் பின்னடைவை சந்தித்தது. பஞ்சாப்பின் இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 4 ஓவரில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹர்ப்ரீத் ப்ரார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் விராட் கோலி, தோனி போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக பயமின்றி பந்து வீச பழகி விட்டதாக ப்ரார் கூறியுள்ளார். அத்துடன் எப்போதும் விக்கெட்டுகளை எடுக்க முயற்சிக்காமல் டாட் பந்துகளை வீச முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அப்படி ரன்களை கொடுக்காமல் துல்லியமாக பந்து வீசினாலே விக்கெட்டுகள் தாமாக கிடைக்கும் என்று கூறும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.
“பிட்ச் பந்து வீசுவதற்கு நன்றாக இருந்தது. அதில் ராகுல் சஹரும் நன்றாக வீசினார். ஐபிஎல் தொடரில் நான் 6 வருடங்களாக விளையாடி வருகிறேன். எனவே என்னுடைய தன்னம்பிக்கை புதிய உயரத்தை எட்டியுள்ளது. அதனால் இப்போதெல்லாம் இந்த ஜாம்பவான்களுக்கு எதிராக பந்து வீசுவதை நான் சாதாரணமாக உணர்கிறேன். அவர்களுக்கு எதிராக என்னுடைய பலத்திற்கு தகுந்தாற்போல் பந்து வீசுகிறேன்”
இதையும் படிங்க: நடப்பு ஐ.பி.எல் தொடரில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை நிகழ்த்திய ருதுராஜ் கெய்க்வாட் – என்ன தெரியுமா?
“உண்மையை சொல்லவேண்டுமெனில் நான் எப்போதும் விக்கெட்டுகளை பற்றி நினைப்பதில்லை. அதிகமான டாட் பந்துகளை வீச வேண்டும் என்பதே என்னுடைய இலக்காகும். அந்த பந்துகள் உங்களுக்கு விக்கெட்டுகளை உருவாக்கி கொடுக்கும். பொதுவாக பிட்ச்சில் கொஞ்சம் சுழல் இருந்தால் பவுலர்களின் தன்னம்பிக்கை அதிகமாகும். அது கொஞ்சம் பவுலர்களுக்கு உதவியும் செய்யும்” என்று கூறினார்.