பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியானது வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ரன்களை குவித்தது. பின்னர் 280 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பேட்டிங்கில் 65 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 82 ரன்கள் குவித்த ஷாஹிப் அல் ஹசன் பந்துவீச்சிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 10 ஓவர்கள் வீசி 57 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெடுகளை கைப்பற்றினார். அதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் : இந்த போட்டியில் குசால் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த மைதானத்தில் பவுலர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி கிடைக்கவில்லை என்பது முன்கூட்டியே எங்களுக்கு தெரிந்து விட்டது.
இருந்தாலும் எங்களது அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி அவர்களை கட்டுக்குள் வைத்தனர். அதேபோன்று இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற முக்கிய காரணமே எங்களது பந்துவீச்சாளர்கள் தான். குறிப்பாக இந்த தொடர் முழுவதுமே எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். நிச்சயம் எங்களால் கம்பேக் கொடுத்து வெற்றிகளை பெற முடியும் என்று நினைத்தோம்.
இதையும் படிங்க : ஹெல்மெட் பிரச்சனைக்கு முன்னாடி மேத்யூஸ் அதை செஞ்சாரு.. அம்பயர் பேட்டி.. தவறை ஆதாரத்துடன் விளாசும் ரசிகர்கள்
அந்த வகையில் இன்றைய போட்டியில் நாங்கள் எங்களது பலத்தை நிரூபித்து வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த தொடரில் தாமதமாக என்னுடைய சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டிருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். அதேபோன்று என்னால் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட முடியாமல் போனது ஒருபுறம் வருத்தம் அளிக்கிறது என ஷாகிப் அல் ஹசன் கூறியது குறிப்பிடத்தக்கது.