ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அசலங்கா 108 ரன்கள் எடுத்த உதவியுடன் 280 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய வங்கதேசம் சாகிப் அல் ஹசன் 82, நஜ்முல் சாண்டோ 90 ரன்கள் எடுத்த உதவியுடன் 41.1 ஓவரிலேயே எளிதாக வென்றது.
முன்னதாக இந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்காக களமிறங்க வந்த இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக தம்முடைய ஹெல்மெட் பழுதாகியிருந்ததை கவனித்தார். அதனால் புதிய ஹெல்மட்டை தனது அணியினரிடமிருந்து அவர் வாங்கி முடிப்பதற்குள் 2 நிமிடம் கடந்தது. அதை நடுவர்களிடம் புகார் செய்த வங்கதேச அணியினர் தங்களுக்கு சாதகமாக அவுட் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார்கள்.
அவர்களது கோரிக்கையை பரிசீலித்த நடுவர்கள் அடிப்படை விதிமுறைப்படி ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட் என்று அறிவித்தது மிகப்பெரிய சர்ச்சையானது. அதாவது ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகி வெளியே சென்ற பின் மற்றொரு பேட்ஸ்மேன் களத்திற்கு வந்து 2 நிமிடங்கள் முடிவதற்கு முதல் பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதை விதிமுறை ஆகும். அதைப் பின்பற்ற தவறிய காரணத்தால் 145 வருட கிரிக்கெட்டில் காலதாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாபமான சாதனையை அவர் படைத்தார்.
மேலும் நிலைமையை மேத்யூஸ் எடுத்துரைத்தும் நேர்மை தன்மையை பற்றி நினைக்காமல் மனசாட்சியின்றி நடந்து கொண்ட வங்கதேச அணியினரை ரசிகர்கள் விமர்சித்தனர். அந்த நிலைமையில் அவுட் கொடுத்ததற்கான பின்னணியை வர்ணனையாளர் மற்றும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிசப் போட்டி இடைவெளியின் போது நடுவரிடம் கேட்டார். அதற்கு ரிசர்வ் நடுவர் ஆண்ட்ரியன் ஹோல்ட்ஸ்டிக் பதிலளித்தது பின்வருமாறு.
“இன்று மதியம் நடைபெற்ற நிகழ்வில் ஹெல்மெட் பிரச்சனையாக வருவதற்கு முன்பாகவே பேட்ஸ்மேன் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு 2 நிமிடங்கள் தாமதம் செய்தார். அதனாலயே அவுட் கொடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார். அதாவது பெவிலியனிலிருந்து பிட்ச்க்கு வருவதற்கே மேத்யூஸ் 2 நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டதால் அவுட் கொடுக்கப்பட்டதாக நடுவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் சொன்னதை தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பி சோதனை செய்து வர்ணனையாளர்கள் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: அம்பயர் நியாயமா நடந்துக்கல.. வருங்காலத்துல சொல்லி அடிக்கும் அணியா மாறுவோம்.. இலங்கை கேப்டன் பேட்டி
அப்போது பெவிலியனிலிருந்து மேத்யூஸ் பிட்ச்க்கு மிகச் சரியாக 1.50 நிமிடங்களில் வந்து விட்டார். இருப்பினும் அதை சரியாக சோதனை செய்யாத நடுவர் குழுவினர் அந்த சமயத்தில் ஏற்பட்ட பரபரப்பில் வங்கதேசம் அணியினர் சொன்னதை வைத்து 2 நிமிடம் முடிந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து அவுட் கொடுத்தது தெரிய வந்தது. அந்த வகையில் மீண்டும் ஒரு மோசமான தீர்ப்பை வழங்கிய நடுவர்களை தற்போது ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.