ரஞ்சி கோப்பையில் கூட இப்படி ஒரு தெறிக்கவிடும் அதிரடி ஆட்டமா? – தொடர்ந்து அசத்தும் தமிழக வீரர்

tn
- Advertisement -

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் பல தடைகளுக்கு பின் வெற்றிகரமாக நேற்று முன்தினம் துவங்கியது. இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக விளங்கும் இந்த புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் கோப்பைக்காக பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.

இந்த வருடம் இத்தொடரானது லீக் மற்றும் நாக்-அவுட் என 2 பகுதிகளாக நடைபெற உள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் துவங்கிய இந்த தொடரில் எலைட் குரூப் ஹச் பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக கிரிக்கெட் அணிக்கு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

டெல்லியுடன் முதல் போட்டி:
இந்த தொடரில் தமிழ்நாடு தனது முதல் போட்டியில் டெல்லியை எதிர்கொண்டு வருகிறது. கௌஹாத்தி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு சமீபத்தில் நடந்த ஐசிசி அண்டர் உலககோப்பை 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்த கேப்டன் யாஷ் துள் தனது அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதம் அடித்து 113 ரன்கள் விளாசினார்.

இதன் வாயிலாக ரஞ்சி கோப்பை வரலாற்றில் அறிமுகப் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அடுத்து வந்த வீரர்கள் தமிழகத்தின் சிறப்பான பந்து வீச்சில் ஆட்டமிழந்த போதிலும் மிடில் ஆர்டரில் அசத்திய லலித் யாதவ் சதம் விளாசி 177 ரன்களும் ஜாண்டி சித்து 71 ரன்களும் அடித்தார்கள். இதன் காரணமாக தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி 452 ரன்கள் குவித்தது. தமிழகத்தின் சார்பில் அதிகபட்சமாக முகம்மது 4 விக்கெட்டுகளும் சந்தீப் வாரியர் மற்றும் பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

தலைநிமிர வைத்த ஷாருக்கான்:
இதை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழகத்திற்கு கௌசிக் காந்தி 55 ரன்களும் சூரிய பிரகாஷ் 23 ரன்களும் எடுத்து சுமாரான தொடக்கம் கொடுத்தார்கள். இருப்பினும் அடுத்து வந்த ஒரு சில வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் ஒரு கட்டத்தில் தமிழ்நாடு 162/5 என மோசமான நிலையில் தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் மற்றும் இளம் வீரர் சாருக்கான் ஆகியோர் சரிந்த தமிழ்நாட்டைத் தூக்கி நிறுத்த முயன்றார்கள்.

5வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தமிழகத்தை மீட்டெடுத்த இந்த ஜோடியில் பாபா இந்திரஜித் சதமடித்து 117 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தமக்கே உரித்தான பாணியில் அதிரடியாகவும் சரவெடியாகவும் பேட்டிங் செய்த இளம் வீரர் சாருக்கான் சதம் விளாசினார். நேரம் செல்ல செல்ல டெல்லி பந்துவீச்சாளர்களை கதறவிட்ட அவர் 148 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 10 மெகா சிக்ஸர்கள் உட்பட 194 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார் என்றாலும் ஒரு கட்டத்தில் தடுமாறிய தமிழகத்தை தலைநிமிரச் செய்தார் என்றே கூறலாம்.

- Advertisement -

புதிய பினிசெர்:
இவரின் அதிரடியான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு 494 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக 3வது நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லியை விட 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தமிழ்நாடு இந்த போட்டியில் வலுவான நிலையில் உள்ளது.

இந்த போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய தமிழக வீரர் சாருக்கான் ஏற்கனவே தனது அதிரடியான ஆட்டத்தால் இளம் வயதிலேயே மிகவும் புகழ் பெற்றுள்ளார். குறிப்பாக கடந்த வருடம் நடந்த சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2021 தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட போது மெகா சிக்சர் அடித்து தமிழகத்துக்கு சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் ஹசாரே கோப்பையிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்ததால் இவரை “பினிசெர்” என தமிழக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

இவ்வளவு திறமை வாய்ந்த ஷாருக்கானை சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 9 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் வெற்றிகரமாக வாங்கியுள்ளது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் தான் ஒரு வீரரின் உண்மையான திறமையை சோதிக்கும் போட்டி என கூறுவார்கள்.

இதையும் படிங்க : இந்தியாவை தோற்க்கடித்த தெ.ஆ அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி. மோசமான ரெக்கார்டு – என்ன நடந்தது?

அப்படிப்பட்ட நிலையில் ரஞ்சி டெஸ்ட் போட்டியிலும் தமிழகம் தடுமாறியபோது களமிறங்கிய ஷாருக்கான் அதிரடி சரவெடியாக 147 பந்துகளில் 194 ரன்கள் விளாசி அபாரமாக பினிஷிங் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் இருந்து உண்மையாகவே ஒரு பினிசெர் உதயமாகி விட்டதாக தமிழக ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement