இந்தியாவை தோற்க்கடித்த தெ.ஆ அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி. மோசமான ரெக்கார்டு – என்ன நடந்தது?

RSA
- Advertisement -

நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டி நியூசிலாந்து நாட்டில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று முன்தினம் துவங்கியது.

Williamson

- Advertisement -

இந்த போட்டியில் நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக பங்கேற்காததால் அவருக்கு பதில் டாம் லாதம் கேப்டனாக செயல்பட்டார். இதையடுத்து துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

திணறிய தென்ஆப்பிரிக்கா:
இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணியின் கேப்டன் மற்றும் அனுபவ வீரர் டீன் எல்கர் உட்பட அனைத்து வீரர்களும் சீட்டுக்கட்டு சரிவது போல மளமளவென தங்களது விக்கெட்டுகளை எதிரணிக்கு பரிசளிக்க தொடங்கினார்கள்.

NZ vs SA

குறிப்பாக நியூசிலாந்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றியின் அதிரடியான துல்லிய ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு கடைசிவரை பதில் சொல்ல முடியாமல் திணறிய தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் வெறும் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹம்சா 25 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்தின் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய மாட் ஹென்றி 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

நியூஸிலாந்து அபாரம்:
இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 15, வில் யங் 8, கான்வே 36 என டாப் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் அசத்திய ஹென்றி நிகோலஸ் சதமடித்து 105 ரன்களும் டாம் ப்ளன்டல் 96 ரன்களும் நெய்ல் வாக்னர் 49 ரன்களும் எடுத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கடைசியில் கோலின் டீ கிராண்ட்ஹோம் 45 ரன்களும், மாட் ஹென்றி 58* ரன்களும் விளாசியதால் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 482 ரன்கள் என்ற மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது. தென்ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக டேன் ஆலிவர் 3 விக்கெட்களை எடுத்தார்.

RSA

இதை அடுத்து 2வது இன்னிங்ஸ்சில் 387 என்ற மிகப்பெரிய ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே டக் அவுட்டாக அடுத்து வந்த வீரர்களும் பெரிய ரன்கள் அடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டானதால் 2வது இன்னிங்ஸ்சில் வெறும் 111 ரன்களுக்கு தென்ஆப்பிரிக்கா மீண்டும் சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணியின் ஹம்சா 41 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் 2வது இன்னிங்சில் பந்துவீச்சில் மிரட்டிய டிம் சவுத்தி 5 விக்கெட்களை எடுத்து வெற்றி பெற செய்தார்.

- Advertisement -

நியூஸிலாந்து வரலாற்று வெற்றி:
இதன் காரணமாக இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற நியூசிலாந்து சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் 1 – 0* என முன்னிலை வகிக்கிறது. இந்த மிகப்பெரிய வெற்றிக்கு 9 விக்கெட்களையும் 58 ரன்களை எடுத்து வித்திட்ட நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

Matt Henry

மறுபுறம் நியூசிலாந்துக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒரு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் கடந்த 1932ஆம் ஆண்டு முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக இப்போதுதான் அந்த அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் கடந்த 2004க்கு பின் முதல்முறையாக 18 ஆண்டுகள் கழித்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நியூஸிலாந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

என்ன தம்பி என்னாச்சு:
இத்தனைக்கும் கடந்த மாதம் தங்களின் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வலுவான விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் இதே டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடரில் உலகத்தரம் வாய்ந்த பல இந்திய வீரர்கள் இருந்த இந்தியாவை  அனுபவமில்லாத இளம் வீரர்களை வைத்துக் கொண்டு சாய்த்த தென்ஆப்பிரிக்கா பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

INDvsRSA

அதன் காரணமாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தையும் இந்தியா கோட்டை விட்டது. மொத்தத்தில் கடந்த மாதம் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்து புலிபோல காட்சியளித்த தென்னாப்பிரிக்கா தற்போது வெளிநாட்டில் நியூசிலாந்துக்கு எதிராக பூனையாக மாறி இப்படி படுதோல்வி அடைந்ததை பார்த்த இந்திய ரசிகர்கள் வடிவேலு பாணியில் “என்ன தம்பி என்ன ஆச்சு” என்று சமூக வலைதளங்களில் கலகலப்புடன் கேட்கிறார்கள்.

Advertisement