உங்க ஆட்டத்தால் பிரயோஜமே இல்ல.. அந்த 2 இந்திய வீரரை பாருங்க.. பாபரை ஓப்பனாக விமர்சித்த அப்ரிடி

Shahid Afridi
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி அதன் பின் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 4 தொடர்ச்சியான தோல்விகளை பதிவு செய்ததால் செமி ஃபைனல் வாய்ப்பு 90% நழுவிப்போனது.

குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக உலகக் கோப்பையில் தோற்ற அந்த அணி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்தித்து அவமானத்திற்குள்ளானது. இருப்பினும் வங்கதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் வென்ற பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்வதற்கு எஞ்சிய போட்டிகளில் வெல்வதுடன் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தோற்க வேண்டும் என்ற நிலைமையில் இருக்கிறது.

- Advertisement -

அப்ரிடி விமர்சனம்:
முன்னதாக இந்த தோல்விகளுக்கு கேப்டனாக முன்னின்று அதிரடியாக விளையாட வேண்டிய பாபர் அசாம் தடுமாற்றமாக செயல்படுவதே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இத்தனைக்கும் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் இதுவரை அரை சதமடித்த 2 போட்டிகளிலும் அதிக பந்துகளை எதிர்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்தாததால் பாகிஸ்தானுக்கு தோல்வியே கிடைத்தது.

இந்நிலையில் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ரன்களை அடிக்காத பாபர் அசாம் மேட்ச் வின்னர் வீரர் என்ற உணர்வை ஏற்படுத்தவில்லை என முன்னாள் கேப்டன் சாகின் அப்ரிடி விமர்சித்துள்ளார். மேலும் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்றவர்களை பார்த்து பாபர் அசாம் முன்னேற வேண்டுமென வெளிப்படையாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சாமா டிவியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பாபர் அசாம் சாதாரணமாக ரன்கள் அடிப்பதிலும் வெற்றிக்கான ரன்கள் அடிப்பதிலும் 2 வித்தியாசங்கள் இருக்கிறது. இங்கே விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் செய்வதை பாருங்கள். அவர்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டாலும் அதற்கு தகுந்த ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைக்கின்றனர். நான் பாபரின் ரசிகன். அவர் பெரிய வீரர் என்று நாம் சொல்கிறோம். ஆனால் அந்த இடத்தை நீங்கள் எட்டிய பின் தொடர்ச்சியான நல்ல செயல்பாடுகளால் தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமாகும்”

இதையும் படிங்க: இன்னும் 34 ரன் தேவை..சச்சினின் மிகப்பெரிய சாதனையை காலி செய்ய காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

“குறிப்பாக பாபர் அசாம் பேட்டிங் செய்யும் போது அவர் நமக்கு போட்டியை வென்று கொடுப்பார் என்ற உணர்வு தாமாக வர வேண்டும். ஆனால் இதுவரை அந்த உணர்வு நமக்கு வரவில்லை. அவர் எளிதாக 50 – 60 ரன்கள் அடிப்பார் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதை வைத்து அவர் போட்டியை வென்று கொடுப்பார் என்ற தன்னம்பிக்கை நம்மிடமில்லை” என்று கூறினார். இதை தொடர்ந்து பாகிஸ்தான் தங்களுடைய அடுத்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்வது குறிப்பிடப்பட்டது.

Advertisement