- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ரா தான் உலகின் சிறந்த பவுலர்.. அந்த துல்லியமான திறமைக்கு 10க்கு 10 மார்க் தருவேன்.. ஷாஹீன் அப்ரிடி ஓப்பன்டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் மிகச்சிறந்த பவுலர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். 2016ஆம் ஆண்டு தோனி தலைமையில் அறிமுகமான அவர் வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பவுலிங் செய்தார். அதைப் பார்த்த வல்லுனர்கள் இவரால் நீண்ட காலம் விளையாட முடியாது என்றும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிக்க முடியாது என்றும் விமர்சித்தனர்.

ஆனால் அதற்கெல்லாம் அசராத பும்ரா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். 2018இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் வெளிநாடுகளில் அபாரமாக பவுலிங் செய்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க பும்ரா முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

துல்லியமான பும்ரா:

அதை விட 2024 டி20 உலகக் கோப்பையில் அபாரமாக பவுலிங் செய்த அவர் 15 விக்கெட்டுகளை எடுத்து தொடர்நாயகன் விருது வென்று இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். கடந்த பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட பும்ரா 32 விக்கெட்டுகளை எடுத்தார். அதே தொடரில் 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் பவுலராகவும் பும்ரா உலக சாதனை படைத்தார்.

அதனால் ஐபிஎல் முதல் சர்வதேச வரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்வதாக பல ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஸ்விங் பந்துகளை துல்லியமாக வீசுவதில் பும்ரா மிகவும் சிறந்தவர் என்று பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பாராட்டியுள்ளார். எனவே உலகில் சிறந்த பவுலரான அவருக்கு தான் 10க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன் என்றும் அப்ரிடி கூறியுள்ளார்.

- Advertisement -

அப்ரிடி பாராட்டு:

இது பற்றி சமீபத்திய பேட்டியில் தொகுப்பாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு. “உண்மையில் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் மிகவும் சிறந்த பவுலராக திகழ்கிறார். அவருடைய ஸ்விங், துல்லியம், அனுபவம் ஆகியவை அற்புதமானது. சமீப காலங்களில் அவர் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 40 வெற்றிகள்.. நான் வெற்றிகரமான இந்திய கேப்டனாக சாதனை படைக்க அவரோட ஆதரவே காரணம்.. விராட் கோலி

முன்னதாக பும்ராவை விட ஷாஹீன் அப்ரிடி மிகவும் சிறந்த பவுலர் என்று பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டினர். ஆனால் இந்தியா உள்ளிட்ட முதன்மை அணிகளுக்கு எதிராக அவர் சுமாராக பவுலிங் செய்ததால் பாகிஸ்தான் உலகக் கோப்பைகளில் தோற்றது. அதனால் விமர்சனங்களை சந்தித்துள்ள அவர் மீண்டும் ஃபார்முக்கு வர முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -